
அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவர் மாதவி புரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை கட்டுரை வெளியிட்டுள்ளது.
எனினும், இவை அடிப்படை ஆதாரமற்றவை என மாதவியும் அவரது கணவரும் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதானி குழுமம் இன்று(ஆக. 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள், பங்குகள் முழு வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன. இது தொடர்பான அனைத்து விவரங்களும் பல்வேறு பொதுத்துறை அறிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம். அதானி குழுமத்துக்கு எந்தவொரு தனிநபருடனும், எவ்வித வணிக ரிதியான தொடர்புமில்லை.
ஹிண்டர்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கை போலியானது, தவறானது , புனைக்கப்பட்டது. பொதுவெளிகளில் உள்ள தகவல்களை திரட்டி உண்மையாக ஆராயாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் சுய லாபத்துக்காக ஹிண்டர்பர்க் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், கடந்த காலங்களில் முழுமையாக விசாரிக்கப்பட்டு, எவ்வித குற்றமோ முறைகேடோ நடைபெறவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்த விஷயங்களை ஹிண்டர்பர்க் மீண்டும் வெளியிட்டுள்ளனர்.
இவையனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததையும் அதானி குழுமம் தங்கள் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.