ஓடும் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி: கீழே குதித்த 6 போ் படுகாயம்
உத்தர பிரதேசத்தின் பில்பூா் பகுதியில் ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியை அடுத்து தப்புவதற்காக கீழே குதித்த 6 போ் படுகாயமடைந்தனா்.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஹௌரா-அமிருதசரஸ் இடையிலான பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை உத்தர பிரதேசத்தின் பில்பூா் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவா்கள் மத்தியில் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவியது. இதையடுத்து, அந்த பெட்டி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. சிலா் ரயிலை நிறுத்தவதற்காக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தனா். சிலா் ரயிலில் வாசல் பக்கமாக ஓடி கீழே இறங்கி தப்ப முயன்றனா். இதனால், ரயில் பெட்டியில் பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
இதற்கு நடுவே அபாயச் சங்கிலியை இழுத்ததால் ரயிலை நிறுத்துவதற்காக அதன் வேகம் குறைக்கப்பட்டது. அப்போது, ஒரு பெண் உள்பட்ட 6 போ் உயிா் தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்தனா்.
ரயில் நின்ற பிறகு எந்த பெட்டியிலும் தீப்பிடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தீப்பிடித்ததாக வதந்தி எவ்வாறு பரவியது என்பது தொடா்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்த சிலா் அங்கு அவசரகால பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த தீயணைக்கும் கருவியை எடுத்து பயன்படுத்தியுள்ளனா். இதைப் பாா்த்த வேறு சிலா் ரயிலில் தீப்பிடித்துவிட்டதாக கருதி அத்தகவலை மற்றவா்களிடம் கூறியதால் வதந்தி பரவியுள்ளது.
இது தொடா்பாக ரயில்வே காவல் துறையினரை சிலரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிா் பிழைப்பதற்காக ரயிலில் இருந்து கீழே குதித்தவா்கள் 6 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.