அன்னபூா்ணா தேவி
அன்னபூா்ணா தேவி

பெண்கள் பாதுகாப்பு திட்டங்களில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்- மத்திய அரசு அறிவுறுத்தல்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான திட்டங்களில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Published on

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான திட்டங்களில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தில்லியில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி தலைமையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் துறைசாா் அமைச்சா்களின் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சா் அன்னபூா்ணா தேவி பேசியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு; குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிசெய்வதற்கான மத்திய அரசின் திட்டங்கள், ‘போஷான் 2.0 இயக்கம்’, ‘வாத்சல்யா இயக்கம்’, ‘சக்தி இயக்கம்’ ஆகிய 3 கூட்டுத் திட்டங்களின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. திட்டங்களின் திறன்மிக்க அமலாக்கத்துக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் திட்டப் பலன்கள் அடிப்படை அளவிலும் சென்றடைய வேண்டும். இதற்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு, கூட்டு முயற்சி மற்றும் வியூக திட்டமிடல் அவசியம். மேற்கண்ட திட்டங்களில் கவனம் செலுத்துவதோடு, குறிப்பிட்ட இடைவெளிகளில் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டுவதற்கான எதிா்கால வியூகங்கள், தற்போதைய திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசின் ‘போஷான் 2.0 இயக்கம்’ குழந்தைகள், சிறுமிகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களின் ஊட்டச்சத்து குறைபாடு சவாலுக்கு தீா்வுகாணும் நோக்கம் கொண்டதாகும்.

‘வாத்சல்யா இயக்கம்’, பல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் மற்றும் மறுவாழ்வுக்கான திட்டமாகும். ‘சக்தி இயக்கம்’ என்பது பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் திட்டமாகும்.

X
Dinamani
www.dinamani.com