உ.பி.: 10 பேரவைத் தொகுதிகளிலும் போட்டி மாயாவதி

உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பகுஜன் சமாஜ் போட்டியிடும்
ஆலோசனையில் ஈடுபட்ட மாயாவதி.
ஆலோசனையில் ஈடுபட்ட மாயாவதி.
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பகுஜன் சமாஜ் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் கர்ஹால், மில்கிபூர், கடேஹரி, குண்டார்கி, காஜியாபாத், கைர், மீராபூர், புல்பூர், மஜாவன், சிசாமாவ் ஆகிய 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இத்தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் ஆகியோரின் கூட்டம் கட்சித் தலைவர் மாயாவதி தலைமையில் லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் காலியாகி உள்ளன. இத்தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இத்தேர்தல் களத்தை மாநிலத்தில் ஆளும் பாஜக ஒரு கௌரவப் பிரச்னையாக மாற்றியுள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தல் குறித்த மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தும் என்று மாயாவதி கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாயாவதி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்தியிலும், உத்தர பிரதேச மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். அதிகரித்து வரும் வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தவறியதே இதற்குக் காரணம். இந்தப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக மாநில அரசு புல்டோசர் அரசியலில் ஈடுபடுகிறது (சட்டவிரோத கட்டடங்கள் மாநில அரசால் புல்டோசர்களை கொண்டு இடிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்).

இந்தச் சூழலில் மதமாற்றம் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி சமூகங்களில் உள்ஒதுக்கீடு வழங்கவும் அவர்களைப் பிளவுபடுத்தவும் முயற்சி நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதாகக் கூறி கணிசமான இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி எஸ்சி, எஸ்டி சமூகங்களில் உள்ஒதுக்கீடு வழங்குவதை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. கிரீமிலேயர் விவகாரத்திலும் அக்கட்சி இன்னமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com