நொய்டா வங்கியின் சர்வரை முடக்கி பணமோசடி செய்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹர்ஷ் பன்சாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஹர்ஷ் பன்சால், பாரதிய ஜனதா யுவா மோர்சாவின் தாத்ரி நகர தலைவராக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஹர்ஷ் பன்சாலை காவலில் வைத்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில், குற்றத்துக்கு உறுதுணையாக இருந்ததாக கருதப்படும் அவரது சகோதரும் பட்டய கணக்காளருமான ஷுபம் பன்சாலை தேடி வருகின்றனர்.
சுமார் 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதை தொடர்ந்து, காசியாபாத்தில் இயங்கி வரும் பன்சால் சகோதாரர்களின் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் நைனிடல் வங்கியின் சர்வர் முடக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம், சுமார் 16 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள் கணக்குகளை சரிபார்க்கும் போது சர்வர் முடக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக ஜூலை மாதம் நொய்டா சைபர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் பிரிவின் உதவி ஆணையர் விவேக் ரஞ்சன் ராய் கூறியதாவது:
“பன்சால் சகோதரர்கள் கருப்பு பணத்தை போலி நிறுவனங்களின் மூலம் வெள்ளை ஆக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். காசியாபாத்தில் இயங்கி வரும் இவர்களது நிறுவனமான ஷுபம் அண்ட் அசோசியேட்ஸ், ரூ. 30 கோடிக்கு அதிகமான பரிபர்த்தனைகள் செய்துள்ளன. அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணையில் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு பணத்தை மாற்றுவதை ஷுபம் பன்சால் மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த பின்னரே மேலும் பல மோசடி குறித்த உண்மை வெளிவரும்” எனத் தெரிவித்தார்.
ஹர்ஷ் பன்சால் குறித்து பாஜக இளைஞரணியின் மாவட்ட தலைவர் கஜேந்திர மாவியிடம் கேட்டபோது, 2023 உள்ளாட்சி தேர்தலின்போது கட்சிக்கு எதிரான நடவடிக்கைக்காக அவர் நீக்கப்பட்டதாகவும், ஆனால் முறையான கடிதம் வழங்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து ஷுபம் பன்சாலை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.