கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி காா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி மருத்துவா் ஒருவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று(ஆக. 8) இரவுப் பணிக்கு வந்த அந்த பெண் மருத்துவர், மறுநாள் காலை அங்கு 3-வது மாடியில் அமைந்துள்ள கருத்தரங்கு அறையில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ரத்தம் வழிந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக, உடல்கூறாய்வில், அந்த மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தற்கொலை அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் சனிக்கிழமை(ஆக. 10) உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ள நிலையில், இந்த கொலை வழக்கு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்தை சேர்ந்த குழுவினர் சம்பவம் நிகழ்ந்த ஆா்ஜி காா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று(ஆக. 13) சென்றடைந்துள்ளனர். அங்கு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தில்லி உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனா். இதனால், திங்கள்கிழமை அனைத்து அவசரமில்லாத சேவைகளும் நிறுத்தப்பட்டன. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை திங்கள்கிழமை தோல்வியில் முடிந்ததால், இன்றும் மருத்துவர்கள் போராட்டம் தொடருகிறது.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமைக்குள் மேற்கு வங்க மாநில காவல்துறையினா் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லையெனில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.