
ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழாவில், பிறந்த இரண்டு நாள்களே ஆன குழந்தை புதைக்கப்பட்ட சம்பவத்தில், குழந்தை எவ்வாறு இறந்தது என்பது குறித்து உடல் கூறாய்வில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தகழி கிராமத்தில், புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையின் உடல் ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது.
ஆனால், குழந்தையின் உடல் அழுகிப்போயிருந்ததால், குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்ததா அல்லது பிறந்த பிறகு உயிரிழந்ததா என்பதை உடல் கூறாய்வில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், குழந்தையின் உள்ளுறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தாய் டோன்னா (22), அவரது ஆண் நண்பர் தாமஸ் (24) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையை தன்னிடம் கொடுத்தபோது, குழந்தை உயிரோடு இல்லை என்று ஆண் நண்பர் கூறுகையில், குழந்தை பிறந்த போது அழுததாக டோன்னா, தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவரிடம் கூறியதாக, அந்த மருத்துவர் அதனை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், குழந்தை பிறந்ததும், குழந்தயை டோன்னா தனது ஆண் நண்பர் தாமஸ் மற்றும் அவரது நண்பர் அசோக்கிடம் கொடுத்துள்ளனர். இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை ஆளில்லாத ஓரிடத்தில் புதைத்துள்ளனர். ஆனால், டோன்னாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், குழந்தை பிறக்கும்போது உயிரோடு இருந்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், பிறந்த குழந்தையை டோன்னா மாடியில் வைத்திருந்து, பிறகு, ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு சுற்றி தாமஸிடம் கொடுத்துள்ளார். அதனால்தான் தாமஸ் குழந்தையின் உடலைத்தான் தான் பெற்றதாகக் கூறுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
டோன்னா வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வெளியே வருவார் என்றும் அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த வழக்கில், தாமஸ் நண்பர் அசோக்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி டோன்னாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் 10ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு டோன்னா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான், இந்த சம்பவம் காவல்நிலையத்துக்கு புகாராகப் பதிவாகியிருக்கிறது. முதலில், பிறந்த குழந்தை எங்கே என்று தனியார் மருத்துவமனை கேட்ட போது, குழந்தையை அம்மா தொட்டிலில் போட்டுவிட்டதாக டோன்னா கூறியிருக்கிறார். தனியார் மருத்துவமனை இது தொடர்பாக விசாரணை செய்தபோது, அது உண்மையில்லை என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவரது ஆண் நண்பரை காவல்துறையினர் விசாரணை செய்ததில் உண்மை தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.