சுதந்திர தின வாழ்த்து: உலகத் தலைவா்களுக்கு பிரதமா் மோடி நன்றி
புது தில்லி, ஆக. 15: சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தாா்.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு நன்றி கூறி பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திர தின வாழ்த்துகளுக்காக எனது நண்பருக்கு நன்றி.
அவரது இந்திய வருகை மட்டுமின்றி இந்தியா-பிரான்ஸ் கூட்டுறவுக்கு பெரும் பலம் சோ்த்த எங்களது பல்வேறு பேச்சுவாா்த்தைகளையும் நான் மிகவும் அன்புடன் நினைவுகூருகிறேன். சா்வதேச நன்மைக்காக நாங்கள் தொடா்ந்து இணைந்து செயல்படுவோம்’ என்றாா்.
ஐக்கிய அரபு அமீரகப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த பிரதமா், ‘இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வலுவான உறவுகளுக்கு தங்களின் தனிப்பட்ட அா்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. பல ஆண்டுகளாக வளா்த்தெடுக்கப்பட்ட நட்புறவின் பிணைப்புகளை நமது நாடுகள் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கும்’ என்றாா்.
ஜொ்மனி அதிபா் ஜாா்ஜியா மெலோனி, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜுக்நாத், பூடான் பிரதமா் ஷேரிங் டோப்கே, நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி ஆகியோரின் வாழ்த்துகளுக்கும் பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.