
வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என நான் பயந்தது மட்டும் நினைவிருக்கிறது என்கிறார் அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டியின் மல்யுத்தப் பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் புதிய சாதனையை படைத்திருந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 50 கிலோ எடைப் பிரிவில் மோதவிருந்த வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் அவரது தங்கப் பதக்கம் கனவு தவிடுபொடியானது.
தங்கப் பதக்கம் வெல்லாவிட்டாலும், இந்திய மனங்களை வென்று நாடு திரும்பியிருந்தார் வினேஷ் போகத், அவர் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்திடம் அளித்திருந்த முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் வோலர் அகோஸ் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அது, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது முதல் வினேஷ் போகத் செய்த போராட்டம் உணர்வுப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ளது. அதாவது, அரையிறுதிப் போட்டி முடிந்ததும், வினேஷ் கூடுதலாக 2.7 கிலோ எடை இருந்தார். உடனடியாக ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனால், 1.5 கிலோ கூடுதலாகவே இருந்தது. பிறகு 50 நிமிடங்கள் கடும் உடற்பயிற்சி செய்தும், அவரது உடலிலிருந்து ஒரு சொட்டு வியர்வையும் வரவில்லை.
நாங்கள் அப்போது எந்த ஒரு வாய்ப்பையும் விடுவதாக இல்லை, நள்ளிரவு முதல் காலை 5.30 மணி வரை பல்வேறு உடற்பயிற்சிக் கருவிகளை அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு மணி நேரமும் வெறும் 2 - 3 நிமி இடைவெளிகள் மட்டும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருந்தார். ஒருநிமிட இடைவெளிக்குப் பிறகு உடனே பயிற்சியை தொடங்குவார். ஒரு முறை அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் விழுந்துவிட்டார். ஆனால், மீண்டும் எழுந்து உடற்பயிற்சியைத் தொடங்கினார். ஒரு மணி நேரம் கடுமையான வெப்பம் நிறைந்த தண்ணீரில் இருந்தார். அவரது கடுமையான உடற்பயிற்சிகளை பற்றி இங்கே என்னால் விரிவாக விளக்க முடியவில்லை. ஆனால், இப்போது ஒன்றுமட்டுமே எனக்கு நினைவிருக்கிறது, அப்போது அவர் கடும் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன். அது மட்டுமே நினைவிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.