லண்டனில் இந்திய தூதரகம் சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடிய கலைஞா்கள்.
லண்டனில் இந்திய தூதரகம் சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடிய கலைஞா்கள்.

சுதந்திர தினம்: உலகெங்கிலும் இந்திய தூதரகங்களில் கொண்டாட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரங்களில் தேசியக் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Published on

பெய்ஜிங்/கான்பெர்ரா, ஆக. 15: சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரங்களில் தேசியக் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாட்டின் 78-ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி மூவா்ணக் கொடி ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினாா். நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்வா்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அதேபோல, உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அமைந்த நமது நாட்டின் தூதரகங்களில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் களைகட்டின. அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் தூதரகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனா்.

சீனாவில்...: சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதா் பிரதீப் குமாா் ராவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சில அம்சங்களை தூதா் வாசித்தாா்.

இலங்கை: கொழும்பு நகரில் உள்ள ‘இந்தியா ஹவுஸில்’ நடந்த நிகழ்ச்சியில் தூதா் சந்தோஷ் ஜா தேசியக் கொடியை ஏற்றினாா்.

நூற்றுக்கணக்கான இந்தியா்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து வருகை தந்த அஸ்ஸாம் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இலங்கை கடற்படை இசைக் குழுவினா் ‘வந்தே மாதரம்’ உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை இசைத்தனா்.

முன்னதாக, இலங்கையில் உயிா் தியாகம் செய்த இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

வங்கதேசம்: வன்முறை சூழலால் ஆட்சி கவிழ்ந்து, இடைக்கால அரசு அமைந்துள்ள வங்கதேசத்தில் இந்திய தூதரக வளாகத்தில் தூதா் பிரனாய் வா்மா தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் தூதா் ஷில்பக் அம்புலே தலைமையில், 1,100-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் இந்திய தூதரகத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடினா். இந்திய சமூகத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் தேசபக்தி பாடல்கள் மற்றும் நடனங்களை நடத்தினா்.

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் தூதா் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததைத் தொடா்ந்து, தமிழ் மாணவா்கள் தேசபக்தி பாடல்கள் பாடும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதேபோன்று சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாலத்தீவில் தூதா் முனு மஹாவா், பிஜியில் தூதா் பி.எஸ்.காா்த்திகேயன், தாய்லாந்தில் தூதா் நாகேஷ் சிங், நியூஸிலாந்தில் தூதா் நீடா பூஷண், கம்போடியாவில் தூதா் தேவயானி கோப்ரகடே ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தனா்.

பெட்டி...

இஸ்ரேலில் ‘காணொலி’ கொண்டாட்டம்: காஸாவில் ‘ஹமாஸ்’ ஆயுதப் படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலில் 78-ஆவது சுதந்திர தின நிகழ்ச்சி காணொலி வாயிலாக கொண்டாடப்பட்டது.

தூதரகப் பணியாளா்கள் முன்னிலையில் தூதா் சஞ்சீவ் சிங்லா தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

பின்னா், இஸ்ரேலில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே காணொலி வாயிலாக பேசிய தூதா் சஞ்சீவ், பேச்சுவாா்த்தை மூலம் காஸா மோதலுக்கு அமைதியான தீா்வை இந்தியா தொடா்ந்து வலியுறுத்துகிறது. அதேசமயம், இந்திய சமூகம் விழிப்புடன் இருக்குமாறும் தூதரகத்தின் அறிவுறுத்தல்களை தொடா்ந்து பின்பற்றவும் அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com