
ககன்யான் திட்டத்துக்கு முன்னோட்டமாக ஆளில்லா கலனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி வரும் டிசம்பரில் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.
எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் திட்டம் வெற்றியடைந்ததற்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து, அதனை இனி வணிகரீதியாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டு அவா்கள் வாயிலாக அத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தற்போது அனுப்பப்பட்டுள்ள இஓஎஸ்-08 செயற்கைக்கோளானது விண்வெளியில் புற ஊதா கதிா்களும், காமா கதிா்களும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறிந்து தகவல் அனுப்பும்.
குலசேகரபட்டினம் ஏவுதளம்: இந்தத் தரவுகள் ககன்யான் திட்டத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஆளில்லா கலனை டிசம்பரில் விண்ணில் செலுத்தி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக ஏவுதல் வாகனம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்தடைந்துள்ளது, ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் நிறைவடையும்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று எஸ்.சோமநாத் கூறினாா்.