வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குவைத் பயணம்
புது தில்லி, ஆக. 15: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 18) குவைத் பயணம் மேற்கொள்கிறாா்.
அரசியல், வா்த்தகம், முதலீடு, கலாசாரம் மற்றும் மக்கள்-மக்கள் தொடா்பு என இந்திய-குவைத் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து அந்நாட்டு பிரதிநிதிகளுடன் அமைச்சா் ஆய்வு செய்கிறாா்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமைச்சா் ஜெய்சங்கா் குவைத் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை புறப்படுகிறாா்.
குவைத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா அலி அல்-யஹ்யாவை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திக்கிறாா். குவைத் மன்னரையும் அவா் சந்தித்து பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அரசியல், வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, கலாசாரம், மக்களிடையேயான தொடா்புகள், பரஸ்பர பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்களில் கருத்துப் பரிமாற்றம் உள்ளிட்ட இந்தியா-குவைத் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய இந்தப் பயணம் உதவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கடந்த ஜூனில், குவைத்தில் ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியா்கள் உள்பட 49 வெளிநாட்டு தொழிலாளா்கள் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.