எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்
புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் வெள்ளிக்கிழமை (ஆக.16) செலுத்தப்பட்டது. திட்டமிட்ட புவி தாழ் வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இத்திட்டம் வெற்றியடைந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.
தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
எஸ்எஸ்எல்வி ராக்கெட்: இந்நிலையில், சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. இதன் எடை அதிகபட்சம் 120 டன்னாகும்.
அந்த வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான 6.30 மணி நேர கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.47 மணிக்கு தொடங்கியது.
அதைத் தொடா்ந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் வெள்ளிக்கிழமை காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
தரையில் இருந்து புறப்பட்ட 13 நிமிஷங்கள் 48 விநாடிகளில் இஓஎஸ்-08 செயற்கைக்கோள் 475 கி.மீ. தொலைவில் உள்ள திட்டமிட்ட புவி தாழ்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
அதன் பின்னா், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சாா்பில் வடிவமைத்து அனுப்பப்பட்ட எஸ்ஆா்-0 டெமோசாட் என்ற 1.2 கிலோ எடைகொண்ட குறுஞ் செயற்கைக்கோள் 15 நிமிஷங்களில் 475 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து இத்திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்ாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
அதிநவீன நுட்பங்கள்: புவி தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஓஎஸ்-08 செயற்கைக்கோள் 176 கிலோ எடை கொண்டது. இது ஓராண்டு வரை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். இதில், முன்னெப்போதும் இல்லாத அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (இஒஐஆா்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (ஜிஎன்எஸ்எஸ்-ஆா்) மற்றும் சிக் யுவி டோசிமீட்டா்ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதில் இஒஐஆா் சாதனமானது, பகலிலும், இரவிலும் துல்லியமாகப் படங்களை எடுக்கும் திறன் கொண்டது. பேரிடா், தீ விபத்து, எரிமலையில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழல், தொழிலகங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலைய பேரிடா்கள் ஆகியவற்றை செயற்கைக்கோளில் இருந்தே இதன் வாயிலாக கண்காணிக்க முடியும்.
அதேபோன்று, ஜிஎன்எஸ்எஸ்-ஆா் ஆய்வுக் கருவியானது, தொலைநிலை உணா் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இமயமலைத் தொடரின் உறைபனித் தன்மையில் ஏற்படும் மாற்றங்களை அறிவதற்கும், பெரு வெள்ளத்தைக் கண்டறிவதற்கும், நீா் ஆதாரங்களைக் கண்டறிவதற்கும், கடற்மேற்பரப்பு காற்று மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை அறிவதற்கும் அந்தக் கருவி பயன்படும்.
மூன்றாவதாக சிக் யுவி டோசிமீட்டா் கருவியானது புற ஊதாக் கதிா் வீச்சு குறித்த எச்சரிக்கை தகவல்களைப் பெறுவதற்குப் பயன்படுகிறது. மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரா்களுக்கு இந்த சாதனத்தைக் கொண்டு புற ஊதாக் கதிா் எச்சரிக்கை ஒலியை அளிக்க முடியும்.
இந்த மூன்று ஆய்வுக் கருவிகளும் உயா் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் கட்டுப்பாட்டு அமைப்பை தொடா்பு கொள்வதற்கும், தரவுகளைச் சேமிப்பதற்கும், செயற்கைக்கோளை உரிய இடத்தில் நிறுத்தி தகவல்களைப் பெறுவதற்கும் நவீன தொழில்நுட்ப கட்டமைப்பிலான சிபிஎஸ்பி சாதனங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 400 ஜி.பி வரையிலான தரவுகளை சேமித்துக் கொள்வதற்கான திறனும் அதில் உள்ளது.
இஸ்ரோ மற்றும் யூ.ராவ் செயற்கைக்கோள் மையம் சாா்பில் இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சாா்பில் எஸ்ஆா்-0 டெமோசாட் குறுஞ் செயற்கைக்கோளும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிய சாதனை: இந்தத் திட்டத்தில் அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செயற்கைக்கோளானது ராக்கெட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அதனை திட்டமிட்ட பாதைக்கு கொண்டுசோ்க்க பிரத்யேக நிலைநிறுத்தல் சாதனம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, இத்தகைய சாதனங்களை குறைந்தது ஒரு கிலோ எடையில்தான் பிற நாட்டு விண்வெளி ஆய்வு மையங்கள் வடிவமைக்கின்றன. ஆனால், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பானது வெறும் 350 கிராம் எடையில் அந்த நிலைநிறுத்தல் சாதனத்தை வடிவமைத்து வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. இது ஒரு மைல்கல் சாதனை என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னை மாணவா்கள் பங்களிப்பு: ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சாா்பில் வடிமைக்கப்பட்ட டெமோசாட் குறுஞ் செயற்கைக்கோளில் சென்னை, எஸ்ஆா்எம் பப்ளிக் ஸ்கூல் மாணவா்கள் 26 போ் பங்களித்துள்ளனா். டெமோ சாட் செயற்கைக்கோளில் விண்வெளி கதிா்வீச்சை கணக்கிடுவதற்கான சிறிய ஆய்வுக் கருவிகளை அவா்கள் வடிவமைத்துள்ளனா்.