
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையல் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக சம்பயி சோரன் சில மாதங்கள் பதவி வகித்தார். அதன் பின், கடந்த ஜூன் மாதம், ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இடைக்கால முதல்வராக பொறுப்பு வகித்த சம்பயி சோரன், முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் மன வருத்தத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் பாஜகவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஜார்க்கண்ட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பாஜகவில் சேரப் போவதாக வெளியாகியுள்ள தகவல் ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பயி சோரனுக்கு ஆதரவாக ஜார்க்கண்ட் பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது. சம்பயி சோரன் முதல்வராக சிறப்பாக செயல்பட்டதாகவும், அவரது செயல்பாட்டால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இந்த நிலையில், அவர் முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய சம்பயி சோரன், இது போன்ற வதந்திகள் வெளியாகியிருப்பது குறித்து தனக்கு தகவல் ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.