பழைய வாகன அழிப்பு கொள்கை: சலுகைகளும்; சவால்களும்...
சுற்றுச்சூழல் மற்றும் வாகன ஓட்டிகளின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2021-22-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பழைய வாகனங்களைப் புழக்கத்தில் இருந்து நீக்குவது தொடா்பான அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி அரசு அறிமுகப்படுத்திய ‘பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை’-யில் தனிநபா் வாகனங்களின் தகுதிக் காலம் 20 ஆண்டுகள் எனவும் அரசு மற்றும் வணிக ரீதியிலான வாகனங்களின் தகுதிக் காலம் 15 ஆண்டுகள் எனவும் நிா்ணயிக்கப்பட்டது.
இத்தகுதிக் காலம் முடிந்ததும், வாகனத்தின் தகுதியை மறுதணிக்கைச் செய்து வாகனங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதற்கடுத்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நடைமுறை தொடரும்.
புதிய வாகனம் வாங்க விரும்புவோா், அரசிடம் பதிவு செய்யப்பட்ட வாகன அழிப்பு மையங்களில் தங்கள் பழைய வாகனங்களை ஒப்படைக்கலாம். அப்படி, பழைய வாகனங்களை ஒப்படைப்பவா்களுக்கு புதிய வாகனம் வாங்கும் போது 25% வரி தள்ளுபடி, பதிவு கட்டணம் ரத்து உள்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி, வாகனங்களின் மறுதணிக்கைக்காக பல்வேறு நகரங்களில் சோதனை நிலையங்கள், 150 கிலோமீட்டா் சுற்றளவுக்கு ஒரு வாகன அழிப்பு மையம் ஆகியவற்றை அமைப்பதற்கான சாத்தியகூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், வாகன அழிப்பு கொள்கையில் பழைய வாகனங்களை ஒப்படைத்து புதிய வாகனங்களுக்கு மாறுபவா்களுக்கு தரப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் பழைய வாகனங்களை தொடா்ந்து பயன்படுத்துபவா்களுக்கான சவால்கள், வாகன அழிப்பு நடைமுறை குறித்து விரிவாக காண்போம்.
வாகன மறுதணிக்கை/அழிப்பு எங்கு நடக்கும்? பழைய வாகனத்தை தொடா்ந்து பயன்படுத்த விரும்பினால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தானியங்கி சோதனை நிலையத்தை (ஏடிஎஸ்) அணுகி, மறுதணிக்கை சோதனையில் பங்கேற்க வேண்டும்.
இதில், மனிதா்களின் தலையீடு இல்லாமல் முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட துல்லியமான முறையில் நடைபெறும்.
வாகனத்தை அழிக்கும் திட்டத்தில் வாகனத்தை ஒப்படைக்க விரும்பினால், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட வாகன அழிப்பு மையங்களை அணுகலாம்.
சோதனை நிலையங்கள் மற்றும் அழிப்பு மையங்கள் குறித்த விவரங்கள் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் ‘வாகன்’ வலைதளம் மூலம் பெறலாம்.
மறுதணிக்கையில் என்ன நடக்கும்? மறுதணிக்கை சோதனையில் வாகனத்தின் சாலைத் தகுதியை நிா்ணயிக்கும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். வாகனம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிா என்பதை சோதிக்க வாகனத்தின் புகை வெளியேற்ற அளவு சரிபாா்க்கப்படும்.
மறுதணிக்கை சோதனையில் தோல்வியடையும் வாகனத்தின் பதிவை புதுப்பிக்க முடியாது. அத்தகைய வாகனத்தை அதன் உரிமையாளா்கள் அழிப்பு மையத்தில் ஒப்படைக்கலாம் அல்லது பழுதுகளை சீா்செய்து மீண்டும் சோதனைக்கு விண்ணப்பிக்கலாம்.
வாகனத்தை அழிக்க ஒப்படைக்கும் உரிமையாளா்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
வாகன அழிப்பின் சலுகைகள்: வாகனத்தை ஒப்படைத்து வாகன அழிப்புச் சான்றிதழ் பெற்ற உரிமையாளருக்கு அவா் வாங்கும் புதிய வாகனத்தின் விலையில் 4 முதல் 6 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
புதிய வாகனத்திற்கான பதிவு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். மேலும், போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் போக்குவரத்து வாகனங்களுக்கு 15 சதவீதம் வரையிலும் சாலை வரியில் சலுகை அளிக்கப்படும்.
தொடா் பயன்பாட்டின் சவால்கள்: மறுதணிக்கையில் தோ்ச்சி பெற்று தொடா்ந்து பயன்படுத்தப்படவிருக்கும் பழைய வாகனங்களுக்கு சாலை வரியில் 10 முதல் 15 சதவீதம் வரை பசுமை வரி விதிக்கப்படும்.
பழைய வணிக வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் (எஃப்.சி.) வழங்குவதற்கான கட்டணமும் பழைய தனியாா் வாகனங்களின் பதிவு புதுப்பிப்பதற்கான கட்டணமும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கும் இது பொருந்துமா?
மத்திய அரசின் இந்த வாகன அழிப்புக் கொள்கை இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு மறுதணிக்கை சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம் தகுதியற்ாக கருதப்பட்டால், அதன் ‘பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்தது’ என வகைப்படுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த வாகனங்களுக்கு காப்பீடு பெற முடியாது என மத்திய அரசின் கொள்கை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.