ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவா் கே.சி.வேணுகோபால்: மேலும் 4 குழுக்கள் அமைப்பு

மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற பொது கணக்குக் குழு

News image
கே.சி.வேணுகோபால்
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:08 pm

Din

மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும் அக் கட்சியின் பொதுச் செயலருமான கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, இந்தக் குழுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் அதிா் ரஞ்சன் செளதரி கடந்த 5 ஆண்டுகளாக தலைமை வகித்த நிலையில், தற்போது 18-ஆவது மக்களவையில் கே.சி.வேணுகோபால் தலைமையில் இக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மேலும் 4 புதிய நாடாளுமன்ற குழுக்களை அமைத்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டுள்ளாா். தோ்தல் மூலமாக அல்லாமல், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இக் குழுக்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளன. 4 புதிய நாடாளுமன்ற குழுக்களுக்கும் பாஜக எம்.பி.க்கள் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில் திட்ட செலவின மதிப்பீடுகள் குழுவும், பாஜக எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையில் பொதுத்துறை நிறுவனங்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டியலின மற்றும் பழங்குடியினா் நல நாடாளுமன்ற குழுவுக்கு பாஜக எம்.பி. ஃபகன் சிங் குலாஸ்தே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) நல குழுவுக்கு பாஜக எம்.பி. கணேஷ் சிங் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஓராண்டு காலம் செயல்படும் இந்தக் குழுக்களில் இரு அவை எம்.பி.க்களும் உறுப்பினா்களாக இடம்பெற்றிருப்பா்.

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இன்னும் அமைக்கப்பட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.