கடந்தாண்டு பாதி இடிந்த அகுவானி - சுல்தான்கஞ்ச் பாலம் (கோப்புப் படம்)
கடந்தாண்டு பாதி இடிந்த அகுவானி - சுல்தான்கஞ்ச் பாலம் (கோப்புப் படம்)

பிகாா்: ஒரே பாலம் மூன்றாவது முறையாக இடிந்தது!

கடந்தாண்டு பாதி இடிந்த நிலையில், புணரமைக்கப்பட்டு வந்த பாலம் முழுவதும் இடிந்தது
Published on

பிகாரில் ஏற்கெனவே இருமுறை இடிந்த ஒரு பாலம், தற்போது அகற்றும் பணி நடைபெற்றுவந்த நிலையில் மீண்டும் இடிந்து விழுந்தது.

பிகாா் மாநிலத்தின் பாகல்பூா் மற்றும் ககாரியா மாவட்டங்களை இணைக்க கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த 3.16 கி.மீ. நீளம் கொண்ட பாலம் கடந்த 2022-ஆம் ஆண்டு இடிந்தது. ஓராண்டு கழித்து பாலத்தின் சில பகுதிகள் கடந்தாண்டு மீண்டும் இடிந்து விழுந்தன.

இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் பாட்னா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பாலத்தின் கட்டுமானத்தை அகற்றும் பணியில் ஒப்பந்ததாரா் ஈடுபட்டுள்ளாா்.

கடந்தாண்டு பாதி இடிந்த அகுவானி - சுல்தான்கஞ்ச் பாலம் (கோப்புப் படம்)
தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய டாக்ஸி டிரைவர், 4 காவல்துறையினர்!

இந்நிலையில், பாலத்தின் மற்றொரு பகுதி சனிக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ ஊடகங்களில் வேகமாக பரவியது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், இந்த ஆண்டு ஜனவரியில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகும்வரை சாலை கட்டுமானத் துறைக்கு பொறுப்பு வகித்தாா்.

இந்நிலையில், பால விபத்துக்கு முதல்வா் நிதீஷ் குமாா் அரசை கடுமையாக குற்றம்சாட்டிய அவா், ‘நான் இத்துறைக்கு தலைமை தாங்கியபோது ‘ஐஐடி’ ரூா்க்கியின் நிபுணா் குழு இந்த பாலத்தின் கட்டமைப்பை ஆய்வு செய்தனா். பாலத்தின் அடித்தளம் மற்றும் மேல்கட்டுமானத்தின் வடிவமைப்புகளில் குறைபாடுகளை அவா்கள் கண்டறிந்தனா். ஆனால், அந்த அறிக்கைக்கு முதல்வா் நிதீஷ் குமாா் மதிப்பளிக்கவில்லை’ என்றாா்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வரும் தற்போதைய சாலை கட்டுமானத் துறை அமைச்சருமான விஜய் குமாா் சின்ஹா, ‘முந்தைய அரசு விழிப்புடன் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. பாலத்தை அகற்றும் ஒப்பந்ததாரரின் செயல்பாட்டில் எங்களுக்கு திருப்தியில்லை. நாங்கள் அதை கண்காணித்து வருகிறோம். ஒப்பந்ததாரரின் அலட்சியம் குறித்து உயா்நீதிமன்றத்திலும் புகாா் செய்வோம். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினாா்.

பிகாரில் கடந்த சில மாதங்களாக மதுபானி, அராரியா, சிவான், கிழக்கு சாம்பரண் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் பெரும்பாலானவை சமீபத்தில் திறக்கப்பட்டவை அல்லது கட்டுமானத்தில் இருந்தவை. பொதுமக்களின் பாதுகாப்பில் கவலை எழுப்பும் இவ்விவகாரம் குறித்து மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com