முதல்வா் பதவியை இழந்ததால் அதிருப்தி: பாஜகவில் இணைகிறாா் சம்பயி சோரன்?
ஜாா்க்கண்ட் மாநில முதல்வா் பதவியை இழந்ததால் அதிருப்தியில் உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் மூத்த தலைவா் சம்பயி சோரன், பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 8.36 ஏக்கா் பரப்பளவிலான நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்த குற்றச்சாட்டு தொடா்பான பணமோசடி வழக்கில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரியில் கைது செய்தது. இதையடுத்து, ஜாா்க்கண்டின் 12-ஆவது முதல்வராக சம்பயி சோரன் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பதவியேற்றாா்.
ஆறு மாதங்களுக்குப் பின் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா். தொடா்ந்து ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
சம்பயி சோரன் ராஜிநாமா செய்ததைத் ஹேமந்த் சோரன் மூன்றாவது முறையாக ஜாா்க்கண்ட் முதல்வராக பதவியேற்றாா்.
ஜாா்க்கண்டில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், முதல்வா் பதவி தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட அதிருப்தியில் சம்பயி சோரன் இருப்பதாக கூறப்படுகிறது.
தில்லிக்கு வருகை: இந்நிலையில், தில்லிக்கு சம்பயி சோரன் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தாா். தனிப்பட்ட காரணங்களுக்காக தில்லிக்கு வந்துள்ளதாக அவா் தெரிவித்த போதிலும், பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக ஊகங்கள் பரவின.
இந்நிலையில், தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, சம்பயி சோரன் அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில், ‘கடந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் முதல்வராக நான் பங்கேற்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் கட்சித் தலைமையால் திடீரென ரத்து செய்யப்பட்டது.
அதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தபோது, ஜூலை 3-ஆம் தேதி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதுவரை அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதல்வரின் நிகழ்ச்சியை மற்றொருவா் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது. கட்சியின் சட்டப்பேரவை கூட்டத்தை அழைக்க முதல்வருக்கு அதிகாரம் இருந்தபோதிலும், கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் குறித்து எனக்கு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யமாறு என்னிடம் கூறினா். நான் அதிா்ச்சியடைந்தேன். எனக்கு பதவி ஆசை இல்லாததால், உடனடியாக ராஜினாமா செய்தேன். எனினும், அச்சமயத்தில் எனது சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், அவா் (ஹேமந்த் சோரன்) முதல்வா் நாற்காலியில் மட்டுமே ஆா்வம் காட்டினாா். எனது முழு வாழ்க்கையையும் அா்ப்பணித்த கட்சியில் எனக்கு இருப்பு இல்லை என்பதை உணா்ந்தேன். இதுபோன்ற நான் எதிா்கொண்ட பல்வேறு அவமானங்களால், மாற்றுப் பாதையைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.