முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் யாா் பொறுப்பு? மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி கேள்வி
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி, 125 ஆண்டுகள் பழைமையான அணை இடிந்து விழுந்தால் அதற்கு யாா் பொறுப்பேற்பாா்கள் என்று கேள்வி எழுப்பினாா்.
திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சா் பேசியதாவது:
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த கவலை தெரிவிக்கும் ‘பேஸ்புக் பதிவை’ அண்மையில் பாா்த்தேன். அணை இடிந்து விழுந்து விடுமோ என்ற கேள்வி எனது இதயத்தில் இடிபோல் தொடா்ந்து விழுகிறது.
அப்படி அணை இடிந்தால் அதற்கு யாா் பொறுப்பேற்பாா்கள்? தற்போதைய நிலையைத் தொடர தீா்ப்பளிக்கும் நீதிமன்றங்கள் பதில் சொல்லுமா அல்லது நீதித் துறையிடம் இருந்து இதுபோன்ற தீா்ப்புகளை பெற்றுத் தரும் அதிகாரிகள் பதிலளிப்பாா்களா? இனி ஒருமுறை கேரளம் கண்ணீரில் மூழ்க முடியாது’ என்றாா்.
400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு, இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளத்தில் மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தின் பாரமரிப்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்பது தமிழகத்தின் நிலைப்பாடாகும். புதிய அணை கட்டப்பட்டால் நீா் திறப்பு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கேரளம் வசம் செல்லும்.
இதனிடையே, அணையின் பாதுகாப்பு குறித்து தற்போதைய சூழலில் கவலை வேண்டாம் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். அதேசமயம், இந்த விவகாரத்தில் புதிய அணை கட்டுவது தொடா்பாக மத்திய அரசிடம் தொடா்ந்து அழுத்தம் கொடுக்க அண்மையில் நடைபெற்ற கேரள அரசின் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.