கொல்கத்தா மருத்துவமனை முதல்வரை துளைத்தெடுக்கும் சிபிஐ! கிடைக்குமா பதில்?

கொல்கத்தா மருத்துவமனை முதல்வரிடம் 13-14 மணி நேரம் விசாரணை தொடர்கிறது, துளைத்தெடுக்கிறது சிபிஐ
கொல்கத்தா கொடூரம்
கொல்கத்தா கொடூரம்PTI
Published on
Updated on
2 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவமனை முன்னாள் முதல்வரிடம் சிபிஐ அதிகாரிகள் தினமும் 14 மணி நேரம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அக்கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடம் நான்காவது நாளாக திங்கள்கிழமையும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தீப் கோஷிடம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. நாள்தோறும் இவரிடம் சுமார் 13 - 14 மணி நேரம் கேள்விகளால் துளைத்தெடுக்கிறது சிபிஐ என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சந்தீப் கோஷிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. பின்னா், இரண்டாம் கட்ட விசாரணைக்காக சனிக்கிழமை அவா் மீண்டும் ஆஜரானாா். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் ஆஜரான நிலையில், திங்கள்கிழமை காலையிலும் சிபிஐ அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு யாா் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது? சம்பவம் நடந்தபோது சந்தீப் கோஷ் எங்கிருந்தாா்? சம்பவம் குறித்து அறிந்ததும் முதல் நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்பட்டது? போன்ற கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டதாக முதல்நாளில் தகவல்கள் வெளியான போதும், விசாரணை முடிந்து வெளியே வரும் சந்தீப் கோஷ் செய்தியாளர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்வது இல்லை. அதுபோலவே சிபிஐ அதிகாரிகளும் ஒரு வார்த்தையும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், உண்மையிலேயே, மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில்தான் குற்றம் நடந்ததா? அல்லது குற்றம் வேறு இடத்தில் நடந்து, பிறகு, உடல் அங்கு கொண்டுவந்து போடப்பட்டதா என்ற கோணத்திலும் சிபிஐ அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

பெண் மருத்துவர் பணியாற்றிய நெஞ்சக நோய் பிரிவு அறையிலும் சிபிஐ அதிகாரிகள் தடயவியல் உள்ளிட்ட சோதனைகளை செய்து வருகிறார்கள். கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடைபெற்று வரும் அதேவேளையில் மற்றும் சிலரிடமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக பலியான பெண் மருத்துவருக்கு வாரத்தில் 36 மணி நேரம் அல்லது சில நேரங்களில் 48 மணி நேரம் வரை கடுமையாக பணி வழங்கியது குறித்தும் முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. பெண் மருத்துவர் முன்னதாக பணி அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

ஆா்.ஜே.கா் மருத்துவமனைக்கும், இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராய் அடிக்கடி தங்கியதாக கூறப்படும் கொல்கத்தா காவல்துறை ஆயுதப் படையின் 4-ஆவது பட்டாலியன் முகாமுக்கும் இரு குழுக்களாக சிபிஐ அதிகாரிகள் பிரிந்து சென்று சனிக்கிழமை விசாரணை நடத்தியிருந்தனர்.

காவலா்கள் முகாமில் நடத்திய விசாரணையில் பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்ட ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலையில் சஞ்சய் ராயின் நடவடிக்கைகள் குறித்து கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com