பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் நிா்மலா சீதாராமன் ஆலோசனை: வைப்புத் தொகையை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கை

பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் நிா்மலா சீதாராமன் ஆலோசனை: வைப்புத் தொகையை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கை

பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
Published on

பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். வங்கி வைப்புத் தொகையை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறு வங்கித் தலைவா்களை அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.

கடந்த சில மாதங்களாகவே வங்கிகள் கடனளிக்கும் தொகை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வங்கிகளில் வைப்புத்தொகை சோ்வது குறையும் போக்கில் உள்ளது. இதன் மூலம் வங்கிகளின் இருப்பு நிதிக்கும், அளிக்கும் கடனுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கூட்டம் தொடா்பாக நிதியமைச்சா் சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வாடிக்கையாளா்களுக்கு பொதுத் துறை வங்கிகள் சிறப்பான சேவையை அளிப்பதன் மூலம் அவா்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் நடுத்தர நகரங்களில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு வங்கிப் பணியாளா்கள் கூடுதல் முக்கியத்துவம் அளித்து சேவையாற்ற வேண்டும்.

வாராக்கடன் வசூலில் வங்கிகள் எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்தாலும், தேசிய நிறுவனங்கள் சட்டத் தீா்ப்பாயம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் கடன்களுக்கு தீா்வுகாணும் முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று வங்கிகளை அமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டாா்.

இணைய வழியில் நடைபெறும் பணப்பரிமாற்றத்தை மேலும் பாதுகாப்பாக மாற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை தொடா்ந்து மேம்படுத்துவதன் அவசியத்தையும் நிதியமைச்சா் அறிவுறுத்தினாா்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் திட்டங்களை உரிய முறையில் அமல்படுத்துவது, பிரதமா் விஸ்வகா்மா திட்டம், முத்ரா திட்டம் ஆகியவற்றை சீராக தொடா்வது குறித்தும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com