
சென்னை: முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் கடந்த 2023 - 24ல் கடுமையாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்தாலும், ரயில் பெட்டிகள், ரயில் ஓட்டுநர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களின் பற்றாக்குறை காரணமாக கூடுதலாக பெட்டிகளை அல்லது கூடுதலாக ரயில்களை இயக்குவது என்பது ரயில்வேயால் இயலாததாக மாறியிருக்கும் நிலையில், முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் நிலைதான் துயரத்திலேயே நீள்கிறது.
கடந்த 2022-23ஆம் ஆண்டில், முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணித்தவர்கள் என 1.96 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், இதுவே 2023-24ஆம் ஆண்டில் 4.18 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தில் கன்னியாக்குமரி மாவட்டம் தவிர்த்து (கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் மண்டலத்தில் வரும்) நான்கு ரயில்வே மண்டலங்களிலும் கிடைத்திருக்கும் புள்ளி விவரம்.
நீண்ட தொலைவு இயக்கப்படும் விரைவு ரயில்களில், முன்பதிவு டிக்கெட்டுகளை அதிகரிப்பது தொடர்பாக ரயில்வே இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது ரயில் நிலையங்களில் 600 முதல் 700 முன்பதிவில்லா டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. ஆனால், ஒரு விரைவு ரயிலில் 2 முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் சென்னை மற்றும் சேலம் மண்டலங்களில், சுமார் 400 முதல் 500 பயணிகள், முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் எடுத்துவிட்டு, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏறி வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணிக்கும்போது பிடிபட்டு அபராதம் செலுத்தியிருக்கிறார்கள்.
சென்னை - திருச்சி, சென்னை - சேலம், சேலம் - கோவை போன்ற குறுகிய தூர வழித்தடங்களுக்கும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் கூடுதலாக மெஐமு மற்றும் அந்தியோதையா ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகளின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபற்றி கேட்டால், ரயில்வே வாரியம் மட்டுமே, புதிய ரயில்கள் குறித்து முடிவெடுக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சேலம் ரயில்வே மண்டலத்தில், முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணிகளின் எண்ணிக்கை 295 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, தமிழகத்தில் உள்ள நான்கு ரயில்வே மண்டலங்களில், சேலம் மண்டலத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணித்து அபராதம் செலுத்திய பயணிகள் எண்ணிக்கை கடந்த 2022 - 23ஆம் ஆண்டுகளில் 29 ஆயிரமாக இருந்த நிலையில், இது 2023-24ல் 1.14 லட்சமாக அதிகரித்துள்ளது.
சென்னை மண்டலத்தில் 2023-24ஆம் ஆண்டு 2.2 லட்சமாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் 1.3 லட்சமாகவும் இருந்துள்ளது. இது 70 சதவீதம் அதிகரிப்பாகும்.
இதுபோலவே மதுரை மண்டலத்திலும், அபராதம் செலுத்திய பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. திருச்சியிலும் 130 சதவீதமாக அபராதம் செலுத்தியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மெமு ரயில்களை இயக்குவது, கூடுதல் பெட்டிகளை சேர்ப்பது என அனைத்தையுமே ரயில்வே வாரியம்தான் முடிவு செய்யும் என்று தான் எந்தக் கேள்விக்கும் இறுதி பதிலாகக் கிடைக்கிறது.
ரயிலில் முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டால், அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருப்பது முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள்தான். அல்லது பேருந்துகள்.
அதிகரித்துவரும் ரயில்களின் தேவைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களையும், அல்லது வார இறுதி நாள்களில் மட்டுமாவது கூடுதல் ரயில்களையும், இருக்கும் ரயில்களில் பெட்டிகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துப் பயணிகளின் விருப்பம்.
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை எடுத்தவர்கள், அவர்களுக்கான ரயில் பெட்டிகளில் இடம் கிடைக்காததால் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறி விடுகிறார்கள். இதனால், முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளும் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகிறார்கள். பல ஆண்டு காலமாக இந்த பிரச்னை நீடித்து வரும் நிலையில், இது மோசமடைகிறதே தவிர, இதற்கு தீர்வு காண ரயில்வே அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2023-24ஆம் ஆண்டு நிலவரப்படி, நாள்தோறும் தெற்கு ரயில்வேயில் 19.4 லட்சம் பயணிகள் சென்று வருகிறார்கள். இது கடந்த ஆண்டு 18 லட்சமாக இருந்துள்ளது. ஆண்டு தோறும் ஒரு லட்சம் அளவுக்கு பயணிகள் அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்ப ரயில்வே தனது சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.
முன்பதிவு செய்யாத டிக்கெட் எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியவர்களிடம் அபராதம் வசூலிப்பது மட்டுமே இதற்கான தீர்வாக ஆகாது. இதற்கு தீர்வு காண பல அடிப்படை விஷயங்களை ரயில்வே நிர்வாகம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ரயில் பயணிகளின் துயரம் களையப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.