ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1,000 ஒதுக்கப்படுவது வழக்கம்தான்!: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே திட்டங்களுக்கு குறைந்தபட்ச நிதி ஒதுக்கப்படுவது வழக்கம்தான் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்
Updated on
2 min read

புது தில்லி: ரயில்வே திட்டங்களுக்கு குறைந்தபட்ச நிதி (ரூ,1,000) ஒதுக்கப்படுவது வழக்கம்தான் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் முழுமை பெறாமலும் ஒப்புக்கொண்டபடி உரிய அனுமதி அல்லது நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் திட்டத்தில் முழுமை பெறாமல் இருக்கும் நிலையில் அந்தத் திட்டம் கைவிடப்படாமல் இருக்க இதுபோன்று குறைந்தபட்ச நிதி (ரூ.1,000) ஒதுக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

நிகழ் நிதியாண்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதைவிட குறைவான நிதி, பொது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலினும், சில தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.1,000 மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

தமிழக அரசின் இயலாமைதான்...: இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் "தினமணி'க்கு அளித்த சிறப்புப் பேட்டி:

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநிலப் பொருளாகும். மாநில அரசு நிலத்தைக் கையகப்படுத்தி அளிக்கும் நிலையில்தான் திட்டங்களை மத்திய அரசு விரைவாக நிறைவேற்ற முடியும். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.1,000 மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு காரணம், தமிழக அரசின் இயலாமையினால் ஏற்பட்ட விளைவுதான். தமிழக அரசு ஒரு அடி எடுத்து வைத்தால், மத்திய அரசு இரண்டு அடி எடுத்து வைக்கும்' என உறுதி அளிக்கிறேன்.

தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்த விவரம்:

1. திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலைக்கான 71.33 கி.மீ. புதிய ரயில் பாதைக்கு ரூ. 1,400 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டது. 41 கிராமங்களில் 273 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்மொழிவு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த ரூ.14.49 கோடி தமிழக அரசின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை நிலத்தைக் கையகப்படுத்தி தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. இதனால், இந்தத் திட்டம் முழுமையடையாததால் பெயரளவில் இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

2. ஈரோடு-பழனிக்கான 91 கி.மீ. புதிய ரயில் பாதை திட்டம் ரூ. 603 கோடியில் அனுமதிக்கப்பட்டது. இதில் தமிழக அரசிடம் நிலம் இலவசமாக வழங்கவும், திட்டச் செலவில் 50 சதவீதத்தை தமிழக அரசின் பங்காக அளிக்கவும் கோரப்பட்டது. ஆனால், மாநில அரசு நிலத்தை வழங்காததுடன், திட்டத்தின் 50 சதவீத நிலுவைத் தொகையைப் பகிரவில்லை. இதனால், இந்தத் திட்டமும் முழுமையடையாததால் பெயரளவுக்கு ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

3. அத்திப்பட்டு-புத்தூர் (88 கி.மீ.) புதிய ரயில் பாதை ரூ.527 கோடியில் அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான செலவில் எண்ணூர் துறைமுக கழகம் (இபிடி) 50 சதவீதத்தைப் பகிர்ந்து கொள்ளும் எனக் கூறப்பட்டதால் அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் எண்ணூர் துறைமுக கழகம் கடந்த 2012 டிசம்பரில் திட்டச் செலவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற்றது. இந்தத் திட்டம், 50 சதவீத செலவைப் பகிர்ந்துகொள்வதன் தேவையின் அடிப்படையில் நிலுவையில் உள்ளது. எனினும், இந்தத் திட்டத்தை தக்கவைக்க பெயரளவுக்கு 1,000 ஒதுக்கப்பட்டது.

4. மாமல்லபுரம் வழியாக 179 கி.மீ. சென்னை-கடலூர் புதிய ரயில் பாதை திட்ட மதிப்பீடு ரூ. 2,670 கோடி. இந்தத் திட்டத்தில், தற்போதுள்ள விழுப்புரம்-புதுச்சேரி ரயில் பாதையில் புதுச்சேரி-கடலூர் இடையே உள்ள ரயில் பாதைகளை இரட்டைப் பாதையாக இணைத்து செயல்படுத்த 2015-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்தது. இந்தச் சீரமைப்பை இறுதி செய்வது நிலுவையில் உள்ளதால், இந்தத் திட்டத்துக்கும் பெயரளவுக்கு ரூ. 1,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட நான்கு திட்டங்களும் கடந்த 2008-09 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவை.

5. ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுமார் 60 கி.மீ. தொலைவு ஆவடி -கூடுவாஞ்சேரி புதிய வழித்தடம் 2013-14 நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டது. இது தொடர்புடைய அரசுகளின் அனுமதிகளுக்கு உட்பட்டது.

முக்கியமாக, தமிழக அரசு நிலத்தை இலவசமாக வழங்கவும், திட்ட கட்டுமானச் செலவில் 50 சதவீதம் பங்கீடு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு இறுதி முடிவு செய்யவேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளது. இதனால், இந்தத் திட்டத்துக்கும் பெயரளவுக்கு ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மதிப்பீட்டுத் தொகை தோராயமானது: இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை வைத்தும் குறைந்தபட்ச தொகை (ரூ.1,000) ஒப்பிடப்படுகிறது. இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது, மூன்று மாதங்களுக்குரியது. அந்த மதிப்பீட்டுத் தொகை (அக்ரிகேட்டிவ் நம்பர்) தோராயமானது. முழுமையான நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிட முடியாது என்றும் அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com