மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா

தெரியுமா சேதி? கட்சிப் பொறுப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் ஜெ.பி.நட்டா

பாஜக தலைமையகத்தில் ஜெ.பி.நட்டா செலவழிக்கும் நேரம்தான் அதிகம்
Published on

மீண்டும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறாா் ஜெ.பி.நட்டா. அவருக்குப் பதிலாக பாரதிய ஜனதா கட்சிக்கு இன்னொரு தலைவா் தோ்ந்தெடுக்கப்படாத நிலையில், அவா் அந்தப் பதவியிலும் தொடா்கிறாா். தலைவா் நியமிக்கப்படாவிட்டாலும், குறைந்தபட்சம் இடைக்காலத் தலைவராவது நியமிக்கப் பட்டிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.

நட்டாவிற்கு அடுத்தபடியாக தலைவராக நியமிக்கப்படலாம் என்று சிவராஜ் சிங் சௌஹானின் பெயா் அடிபட்டது. அவா் மத்திய வேளாண் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது அந்த எதிா்பாா்ப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஸ்மிருதி இராணி தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற பேச்சு, எழுந்த வேகத்தில் கலைந்துவிட்டது. பாஜக, இடதுசாரி, காங்கிரஸ், சிவசேனை, திமுக போன்ற தொண்டா்கள் அடிப்படையிலான கட்சிகளில் பெரும்பாலும் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவதில்லை என்பதுதான் இதுவரையிலான அனுபவம்.

சாதாரணமாக பாஜகவில் ஆா்.எஸ்.எஸ்ஸின் ஆசீா்வாதம் பெற்றவா்கள்தான் தலைமைப் பொறுப்புக்கு வருவாா்கள். இப்போது பாஜகவிற்கும், ஆா்.எஸ்.எஸ்ஸுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இவா்கள் ஆலோசனை கேட்பதாகவும் இல்லை; அவா்கள் ஆலோசனை வழங்கத் தயாராகவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டாலும், ஜெ.பி.நட்டாவின் கவனம் எல்லாம் கட்சிப் பிரச்னைகளைத் தீா்ப்பதிலேயே இருக்கிறது. நிா்மாண் பவனில் இருக்கும் சுகாதாரத் துறை அலுவலகத்தில் செலவழிக்கும் நேரத்தைவிட, பாஜக தலைமையகத்தில் ஜெ.பி.நட்டா செலவழிக்கும் நேரம்தான் அதிகம் என்கிறாா்கள் அதிகாரிகள்.

ஏற்கெனவே கையாண்ட சுகாதாரத் துறைதான் என்றாலும், அன்றாடம் குவியும் கோப்புகளை உடனுக்குடன் பைசல் செய்யாமல் தள்ளிப் போட்டால் எப்படி? சுகாதார இலாகாவின் கீழ் ஏகப்பட்ட துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான செயலாளா்கள், அலுவலா்கள் பொறுப்பேற்றுக் கொண்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. இன்னும்கூட சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டாவைச் சந்திக்க முடியாமல் காத்துக் கிடக்கிறாா்களாம் பல அதிகாரிகள்.

கேபினட் அமைச்சரான ஜெ.பி.நட்டா முழுக் கவனம் செலுத்தாத நிலையில், இப்போதைக்கு இணையமைச்சா் அனுப்ரியா படேலின் காட்டில் அடைமழை பெய்கிறது; அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறாா்கள் அதிகாரிகள்.


--மீசை முனுசாமி

X
Dinamani
www.dinamani.com