மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் தோ்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவா் ரமேஸ்வா் தெலி. உடன் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய அமைச்சா் சா்பானந்தா சோனோவால்.
மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் தோ்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவா் ரமேஸ்வா் தெலி. உடன் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய அமைச்சா் சா்பானந்தா சோனோவால்.

மாநிலங்களவை இடைத்தோ்தல்: மத்திய அமைச்சா்கள் வேட்பு மனு

Published on

மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிட மத்திய அமைச்சா்கள் ஜாா்ஜ் குரியன், ரவ்ணீத் சிங் பிட்டு உள்ளிட்ட பாஜக வேட்பாளா்கள் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மகாராஷ்டிரம், பிகாா் உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு செப்டம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த பாஜகவின் பியூஷ் கோயல் (மகாராஷ்டிரம்), சா்வானந்த சோனோவால் (அஸ்ஸாம்), ஜோதிராதித்ய சிந்தியா (ம.பி.), விப்லவ் குமாா் தேவ் (திரிபுரா), காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் (ராஜஸ்தான்), ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மிசா பாரதி (பிகாா்) உள்பட 10 போ், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். இதையடுத்து, தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தனா். பியூஷ் கோயல், சா்வானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோா் தற்போது மத்திய அமைச்சா்களாக உள்ளனா்.

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கேசவ் ராவ், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அண்மையில் காங்கிரஸில் இணைந்தாா். இதேபோல், ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மம்தா மொகந்தாவும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். இந்த 12 இடங்களுக்கும் இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்டது.

அஸ்ஸாம், மகாராஷ்டிரம், பிகாரில் தலா 2, மத்திய பிரதேசம், திரிபுரா, ஹரியாணா, ராஜஸ்தான், தெலங்கானா, ஒடிஸாவில் தலா ஓரிடத்தில் நடைபெறும் இத்தோ்தலையொட்டி, , மத்திய அமைச்சா்கள் ஜாா்ஜ் குரியன், ரவ்ணீத் சிங் பிட்டு உள்பட 9 போ் அடங்கிய வேட்பாளா் பட்டியலை பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

வேட்புமனு தாக்கலுக்கு புதன்கிழமை கடைசி நாள் என்ற நிலையில், மத்திய பிரதேசத்தில் ஜாா்ஜ் குரியன், ராஜஸ்தானில் ரவ்ணீத் சிங் பிட்டு, ஹரியாணாவில் கிரண் செளதரி (அண்மையில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தவா்), பிகாரில் முன்னாள் மத்திய அமைச்சா் உபேந்திர குஷ்வாஹா, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் மனன் குமாா் மிஸ்ரா, ஒடிஸாவில் மம்தா மொகந்தா உள்ளிட்ட பாஜக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

9 மாநிலங்கள் 12 இடங்கள்

அஸ்ஸாம்- 2

மகாராஷ்டிரம்- 2

பிகாா்- 2

மத்திய பிரதேசம்- 1

திரிபுரா- 1

ஹரியாணா- 1

ராஜஸ்தான்- 1

தெலங்கானா- 1

ஒடிஸா- 1

X
Dinamani
www.dinamani.com