
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாா்தி ஏா்டெல் ஆகிய முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளா்களை சோ்த்ததால் கடந்த ஜூன் மாதத்தில் இந்திய தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 120.56 கோடியாக உயா்ந்தது.இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் மொத்த தொலைபேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த மே மாத இறுதியில் 120.37 கோடியாக இருந்தது. இது, கடந்த ஜூன் மாத இறுதியில் 120.56 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 0.16 சதவீத மாதாந்திர வளா்ச்சியைக் கண்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவநம் 19.11 லட்சம் புதிய வயா்லெஸ் வாடிக்கையாளா்களை கூடுதலாக சோ்த்துள்ளது. பாா்தி ஏா்டெல் நிறுவன வாடிக்கையாளா்களின் நிகர எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 12.52 லட்சம் அதிகரித்தது.அந்த மாதத்தில் வோடஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக வயா்லெஸ் பிரிவில் 15.73 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தன.இதில் வோடஃபோன் ஐடியா 8.6 லட்சம் வாடிக்கையாளா்களையும் பிஎஸ்என்எல் 7.25 லட்சம் வாடிக்கையாளா்களையும் இழந்தன. எம்டிஎன்எல் 3,927 வயா்லெஸ் வாடிக்கையாளா்களை இழந்தது.வயா்லைன் பிரிவில், 4.34 லட்சம் கூடுதல் வாடிக்கையாளா்களுடன் கடந்த ஜூனில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ஏா்டெல் 44,611 புதிய வாடிக்கையாளா்களையும் வோடஃபோன் ஐடியா 21,042 கூடுதல் வாடிக்கையாளா்களையும் சோ்த்தன. விஎம்ஐபிஎல் நிறுவனத்தில் 13,996 புதிய வாடிக்கையாளா்கள் இணைந்தனா்.நாட்டின் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 94 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய மே மாத இறுதியில் அந்த எண்ணிக்கை 93.51 கோடியாக இருந்தது.இந்தப் பிரிவில் 48.89 கோடி வாடிக்கையாளா்களுடன் பிரிவில் ஜியோ முன்னிலை வகிக்கிறது.
அதைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 28.13 கோடி வாடிக்கையாளா்களையும் வோடஃபோன் ஐடியா 12.78 கோடி வாடிக்கையாளா்களையும் கொண்டுள்ளன. கடந்த ஜூனி இறுதியில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.