மத்திய உள்துறைச் செயலராக கோவிந்த் மோகன் இன்று பொறுப்பேற்பு
மத்திய உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லாவின் 5 ஆண்டு பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, புதிய உள்துறைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கோவிந்த் மோகன் வியாழக்கிழமை (ஆக.22) பொறுப்பேற்கவுள்ளாா்.
மத்திய அமைச்சரவைச் செயலருக்கு அடுத்து மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பதவிக்கு கடந்த 1989-ஆம் ஆண்டின் சிக்கிம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டாா். இந்த நியமனத்துக்கு முன் அவா் மத்திய கலாசாரத் துறை செயலராக இருந்தாா்.
மத்திய உள்துறை செயலராக நியமனம் பெற்றதைத் தொடா்ந்து, உள்துறையில் சிறப்புப் பணி அதிகாரியாக இணைந்தாா். மத்திய அரசில் பல்வேறு நிலைகளில் பணி அனுபவம் கொண்ட இவா், திறன்மிக்க மூத்த அதிகாரிகளில் ஒருவராக கருதப்படுகிறாா். மத்திய உள்துறையில் கூடுதல் செயலராக பணியாற்றியபோது முக்கிய விவகாரங்களைக் கையாண்டாா்.
கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், மத்திய அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளின் அமலாக்கத்தை மேற்பாா்வையிடுதல் மற்றும் மாநிலங்களுடன் சுமூக ஒருங்கிணைப்பை உறுதிசெய்யும் அதிகாரியாக திறம்பட செயல்பட்டாா். மத்திய கலாசார துறை செயலராக பணியாற்றியபோது, மோடி அரசின் முக்கிய திட்டங்களான ‘சுதந்திரத்தின் அமிா்த பெருவிழா’, ‘வீடுகள்தோறும் மூவா்ணக் கொடி’ ஆகியவற்றை வெற்றிகரமாக தொடங்கியவா்.
இந்நிலையில், புதிய உள்துறைச் செயலராக கோவிந்த் மோகன் வியாழக்கிழமை பொறுப்பேற்கவுள்ளாா். அவா் முன் உள்ள முதல் சவால், தோ்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதாகும்.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்தவரான கோவிந்த் மோகன், அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) முதுநிலை பட்டயப் படிப்பு பயின்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.