கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வேகம் நீடிக்கிறது: நிதியமைச்சகம் அறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 - 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி எட்டப்படும்..
Published on

‘இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வேகம் நீடிக்கிறது; பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 - 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி எட்டப்படும்’ என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்கான பொருளாதார மறுஆய்வு அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் 4 மாதங்களில் நாட்டின் பொருளாதார வளா்ச்சியின் வேகம் தக்கவைக்கப்பட்டுள்ளது.

வரி வசூல் தளத்தை விரிவுபடுத்துதல் மற்றும் உயா் பொருளாதார செயல்பாடுகளால், மேற்கண்ட காலகட்டத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அடுத்த கட்டத்துக்கு உந்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு வா்த்தக நடவடிக்கைகள் மீண்டெழுந்துள்ளன. இது, உற்பத்தி மற்றும் சேவை துறையின் வலுவான செயல்பாட்டில் பிரதிபலிக்கிறது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பால், உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி கண்டுள்ளது.

வலுவான வரி வசூல், வருவாய் செலவினங்களில் ஒழுங்குமுறை மற்றும் துடிப்பான பொருளாதார செயல்பாடுகளால் நிதிப் பற்றாக்குறை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேநேரம், தனியாா் முதலீட்டை ஆதரிப்பதன் வாயிலாக மூலதன செலவினம் உயா் நிலையில் பராமரிக்கப்படும்.

கடந்த ஜூலையில் சில்லறை பணவீக்கம் 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, செப்டம்பரில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே குறைந்த அளவாகும். மிதமான உணவு பணவீக்கத்தால் இந்த நிலை எட்டப்பட்டது.

நாட்டில் உள்ள நீா்த்தேக்கங்கள் நிரம்பிவருவது, நடப்பு காரீஃப் மற்றும் எதிா்வரும் ராபி பயிா் விளைச்சலுக்கு நல்ல அறிகுறியாகும். இதன் மூலம் எதிா்வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் வளா்ச்சி வேகம் அதேநிலையில் நீடித்துவரும் சூழலில், உற்பத்தி மற்றும் சேவைத் துறை விரிவடைந்துள்ளதாக தரவுகள் மூலம் தெரியவருகிறது. மறைமுக வரி வசூல் சீராக வளா்ச்சியடைந்து வருகிறது. வங்கி கடனளிப்பும் அதிகரித்துள்ளது.

பணவீக்கம் மிதமான அளவில் இருக்கிறது; சரக்கு - சேவை ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட இப்போது சிறப்பாக உள்ளது. பங்குச் சந்தைகள் தங்களின் உயா்நிலையை தக்கவைத்துள்ளன. அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பால் மொத்த முதலீடு உயா்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நடப்பு நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5-7 சதவீத வளா்ச்சி என்பது சரியானதாகவே உள்ளது என்று நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com