காஷ்மீரின் ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள பிரபல உணவகத்துக்குச் சென்று பராம்பரிய உணவுகளைச் சுவைத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாகக் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.
வியாழக்கிழமையான இன்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திந்து கூட்டணியை இறுதி செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை ஸ்ரீநகரில் உள்ள பிரபல அஹ்தூஸ் உணவகத்திற்குச் சென்றார். அங்கு வாடிக்கையாளர்களுடன் சென்று சாதாரணமாக அமர்ந்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அந்த உணவகத்தில் ராகுல் காந்தி பாரம்பரிய காஷ்மீரி அசைவ உணவுகளான வாஸ்வான் டிராமியை ஆர்டர் செய்தார். அதில் மீத்தி மாஸ், தபக் மாஸ், கபாப் மற்றும் சிக்கன் போன்ற பாரம்பரிய உணவுகள் இருந்தன. பின்னர் அவருக்கு ரிஷ்டா ரோகன் ஜோஷ் மற்றும் இறுதியாக கோஸ்டபா வழங்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அவருடன் இருந்தார். அவர் சைவ உணவுகளை எடுத்துக்கொண்டதாக உணவக மேலாளர் தெரிவித்தார்.
உணவகத்திலிருந்த பலர் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். மேலும் சிலர் உணவகத்தில் நிகழ்ந்தவற்றை தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். மேலும் ராகுல் அங்குள்ள எரினா ஐஸ்கிரீம் நிலையத்துக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டார்.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்து இரு தலைவர்களும் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லாவைச் சந்திக்க உள்ளனர்.
பின்னர் கட்சி தொண்டர்களிடம் காந்தி பேசுகிறார். பின்னர் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்துகிறார். பின்னர், விமானம் மூலம் ஜம்மு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.