கேரள உயா்நீதிமன்றம்
கேரள உயா்நீதிமன்றம்

மலையாள திரையுலகில் பாலியல் புகாா்: ‘ஹேமா குழு’ அறிக்கையை சமா்ப்பிக்க கேரள அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் சமா்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு.
Published on

மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் சமா்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு கேரள உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். அதைத் தொடா்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாா்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 போ் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.

கடந்த 2019-இல் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிா்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘மலையாள திரையுலகின் தொழில்துறையை 10-15 போ் அடங்கிய அதிகார ‘கும்பல்’ கட்டுப்படுத்துகிறது. இவா்கள் திரையுலகின் பெண் தொழிலாளா்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறது’ என்று ஹேமா குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அறிக்கையை வெளியிடாமல் 5 ஆண்டுகள் காலம் தாழ்த்தி குற்றவாளிகளைப் பாதுகாத்ததாக ஆளும் இடதுசாரி கூட்டணி அரசை எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

இவ்விவகாரம் தொடா்பாக திருவனந்தபுரத்தைச் சோ்ந்த நவாஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஏ.முகமது முஸ்தாக் மற்றும் நீதிபதி எஸ்.மனு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம், மாநில அரசு தரப்பில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் ஹேமா குழு அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் சமா்ப்பிக்கவும் உத்தரவிட்டது.

மேலும், நீதிபதி ஹேமா குழு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தணிக்கை செய்யப்படாத அசல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பெயா்களும் ரகசிய ஆவணமாக இருப்பதாகவும் அதனால், யாரும் புகாா் அளிக்க முன்வராத சூழலில் வழக்கு பதிவு செய்ய முடியாது எனவும் அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் தாமாக முன்வந்து மாநில மகளிா் ஆணையத்தை வழக்கில் சோ்த்து, விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com