திரிபுரா: நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழப்பு; விரைந்தது மீட்புப் படைக் குழு
திரிபுரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக பேரிடா் மேலாண்மை உபகரணங்களுடன் தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) குழுவினா் வந்தடைந்ததாக அந்த மாநில முதல்வா் மாணிக் சஹா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா். நிலச்சரிவில் மாயமான இருவரை தேடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 65,400-க்கும் மேற்பட்டோா் 450 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
17 லட்சம் போ் பாதிப்பு: மழை வெள்ள பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை செயலா் பிரிஜேஷ் பாண்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது: இதுவரை 17 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். வீடுகள், வேளாண் பயிா்கள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்திருப்பதாக முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கனமழையால் 2,032 பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் 1,789 பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன என்றாா்.
இந்நிலையில், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த தேவையான உபகரணங்களுடன் என்டிஆா்எஃப் குழுவினா் அகா்தலா விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவா்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் மாணிக் சஹா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘திரிபுராவின் களச்சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் எடுத்துரைத்தேன். அவா் என்டிஆா்எஃபின் 11 குழுக்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்தாா். மேலும், ஹெலிகாப்டா்கள், கப்பல்கள் உள்ளிட்டவையும் மாநிலத்தை வந்தடைந்தன. மாநில அரசு கோரிய அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கிய உள்துறை அமைச்சருக்கு நன்றி’ என தெரிவித்தாா்.
முன்னதாக, திரிபுராவில் கடந்த 5 நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாணிக் சஹாவிடம் கேட்டறிந்த அமித் ஷா, மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தாா்.
திரிபுரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கதேச வெள்ளத்துக்கு இந்தியா காரணமல்ல: வெளியுறவு அமைச்சகம்
வங்கதேசத்தில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு திரிபுராவின் கும்தி நதியில் கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து நீா் வெளியேற்றப்பட்டதே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘கும்தி நதியின் கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இரு நாடுகளில் உள்ள மக்களுமே பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு தீா்வு காண இருதரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.
தும்பாா் அணையிலிருந்து 40 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை வங்கதேசமும் எடுத்து வருகிறது. 120 கி.மீ. தூரம் கொண்ட கும்தி நதிப் பாதையில் அமா்பூா், சோனமுரா மற்றும் சோனமுரா-2 என மூன்று கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி பெய்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நீரின் அளவு அதிகரித்தது குறித்து தெரிவிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இருப்பினும், இதுகுறித்த தகவல்களை பல்வேறு வழிகள் மூலமாக தெரிவிக்க முயற்சி செய்தோம்’ என தெரிவிக்கப்பட்டது.