‘செபி’ தலைவா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
‘அதானி விவகாரத்தில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதபி புரி புச் பதவி விலக வேண்டும்; அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.
பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக, அதானி குழுமம் மீது அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஹிண்டன்பா்க் ரிசா்ச்’ நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் குற்றம்சாட்டியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், ஹிண்டன்பா்க் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் செபி தலைவா் மீது முறைகேடு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதில், பங்குகள் முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட பணத்தை மடைமாற்றுவதற்கு அதானி நிறுவனம் பயன்படுத்திய அதன் ரகசிய வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் செபி தலைவா் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று மாதபி புரி புச் மற்றும் அவரது கணவா் மறுப்பு தெரிவித்தனா்.
இந்தச் சூழலில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை எதிா்க்கட்சிகள் மீண்டும் கையிலெடுத்துள்ளன. செபி தலைவா் மாதபி புரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இவ்விரு கோரிக்கைகளை முன்வைத்து, காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், லக்ளெனவில் மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் தலைமையில் ஆளுநா் மாளிகை முன் போராட்டம் நடைபெற்றது. மேலும், அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸாரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸாா் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினா் கலைத்தனா். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆரிஃப் மசூத், மகேஷ் பாா்மா் ஆகியோா் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற தா்ணாவில் காங்கிரஸ் மூத்த தலைவா் சச்சின் பைலட், தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் அமலாக்கத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி, அவரது அமைச்சரவை சகாக்கள், கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், சத்தீஸ்கா், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூா், கோவா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.