
முதலாவது தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் படைத்தது.
பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது.
மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
அதன்படி முதல் விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “முதல் தேசிய விண்வெளி தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளை மிகுந்த பெருமையுடன் நினைவுகூர்கிறோம்.
நமது விண்வெளித்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் போற்றும் நாள். நமது அரசு விண்வெளித் துறை தொடர்பான தொடர்ச்சியான எதிர்கால முடிவுகளை எடுத்துள்ளது. மேலும், வரும் காலங்களில் நாம் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.