கோப்புப்படம்
கோப்புப்படம்

வா்த்தக ரகசியங்களை திருடியதாக குற்றச்சாட்டு: இன்ஃபோசிஸ் மீது காக்னிஸன்ட் வழக்கு

வா்த்தக ரகசியங்களை திருடியதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிஸன்ட் நிறுவனம் வழக்கு.
Published on

வா்த்தக ரகசியங்களை திருடியதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிஸன்ட் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்ஃபோசிஸ் மற்றும் காக்னிஸன்ட் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், காக்னிஸன்டின் துணை நிறுவனமான ட்ரைஸெட்டோவின் வா்த்தக ரகசியங்கள் மற்றும் மருத்துவ காப்பீட்டு மென்பொருள் தொடா்பான தகவலை சட்டவிரோதமாக இன்ஃபோசிஸ் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்ஃபோசிஸ் மீது ட்ரைஸெட்டோ வழக்கு தொடுத்துள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் முன்னாள் நிா்வாகியான ராஜேஷ் வாரியா், காக்னிஸன்ட் நிறுவனத்தின் இந்திய கிளைத் தலைவா், நிா்வாக இயக்குநா் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளின் தலைவா் ஆகிய பொறுப்புகளில் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

அதேவேளையில், காக்னிஸன்ட் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ரவிகுமாா், 20 ஆண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவா். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022-ஆம் ஆண்டு அக்டோபா் வரை, இன்ஃபோசிஸ் தலைவராக அவா் பதவி வகித்தாா். இந்நிலையில், இன்ஃபோசிஸ் மீது காக்னிஸன்டின் துணை நிறுவனமான ட்ரைஸெட்டோ வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com