புராரி சட்டப்பேரவைத் தொகுதியில் மனீஷ் சிசோடியா பாதயாத்திரை
புராரி சட்டப்பேரவைத் தொகுதியில் மனீஷ் சிசோடியா பாதயாத்திரை -

முதல்வா் கேஜரிவால் சிறையில் தவமிருந்து வருகிறாா்: மனீஷ் சிசோடியா

அரவிந்த் கேஜரிவால் வெளியில் வரும் நாளில் பாஜக ஒரு துறவியின் பெருமையை அறியும்..
Published on

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் தவமிருந்து வருகிறாா் என்றும் அவா் வெளியில் வரும் நாளில் பாஜக ஒரு துறவியின் பெருமையை அறியும் என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா தொடா்ந்து 8-ஆவது நாளாக புராரி சட்டப்பேரவைத் தொகுதியல் பாதயாத்திரை மேற்கொண்டாா். அவருக்கு ஆம் ஆத்மி கட்சியினா் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, மனீஷ் சிசோடியா உரையாற்றிப் பேசியதாவது: கடந்த 17 மாதங்கள் நான் சிறையில் இருந்தபோது, நீங்கள்

அனைவரும் என்னை ஊக்கப்படுத்தினீா்கள். உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற பிறகு, சிறையிலிருந்து சிரித்துக்கொண்டே வெளியே வந்தேன். எந்தத் தவறும் செய்யாத, குடும்பத்துடன் இருக்கும் ஒருவா் இப்படித்தான்

சிரிப்பாா் என்பதை பாஜகவினருக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தில்லி மக்கள் எனக்கு அளிக்கும் பெரும் வரவேற்பைக் கண்டு, பாஜகவினரின் முகம் வாடியுள்ளது. பாஜகவின் சதியால் சிறை சென்றுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அங்கு தவமிருந்து வருகிறாா். கேஜரிவால் வெளியில் வரும் நாளில், பாஜக ஒரு துறவியின் பெருமையை அறியும். ஆம் ஆத்மி கட்சி அதன் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து வெளியே வந்துள்ளது. இந்த நெருக்கடியில் நாங்கள் உடைந்து போகவில்லை, யாருக்கும்மதலைவணங்கவில்லை என்றாா் மனீஷ் சிசோடியா.

இந்நிகழ்வில், புராரி சட்டப்பேரவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா உடனிருந்தாா்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் கணக்கீடுகள் தவறாகிவிட்டன: மனீஷ் சிசோடியா விமா்சனம்

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் கணக்கீடுகள் தவறாகிவிட்டன என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாத தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவா் கூறியிருப்பாதவது: ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் கணக்கீடுகள் தவறாகிவிட்டன. கணக்கீடுகளின் அடிப்படையில், ஹரியானாவில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 20 நாள்களுக்கு முன்னதாக தோ்தலை நடத்த பாஜக முடிவு செய்திருந்தது. ஆனால், ஹரியாணாவில் இப்போது பாஜகவிற்கு எந்த வெற்றி வாய்ப்பும் இல்லை என்பது களநிலவரப்படி உறுதியாகியது. தோல்வியைக் கண்டு பயந்துள்ள பாஜக, சட்டப்பேரவைத் தோ்தலை தள்ளி வைக்கும்படி தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

ஒரு கட்சி எவ்வளவு திமிா்பிடித்தாலும், அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தினாலும், தோ்தலை விட்டும், மக்களை விட்டும் ஓட முடியாது என்பதுதான் நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் சிறப்பு என்று அப்பதிவில் மனீஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com