ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு(யூபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாக உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சரவை இன்று(ஆக. 24) ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் இன்று(ஆக. 24) தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மத்திய அரசு ஊழியர்கள், ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ அல்லது ’யூபிஎஸ்’ என்றழைக்கப்படும் ’ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ ஆகியவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் குறைந்தபட்ச தொகையிலான ஓய்வூதியம் ஆகியவை கிடைப்பது உறுதி செய்யப்படும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. அதன்படி,
மத்திய அரசு ஊழியராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 ஓய்வூதியத் தொகை கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு, அவருக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையில் 60 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
25 ஆண்டுகள் பணிபுரிந்த மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்ற பின், அவர் ஓய்வுபெரும் முன் கடைசி ஓராண்டில் பெற்ற சராசரி அடிப்படை சம்பளத் தொகையில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத் தொகையில், ஓய்வூதியப் பணப் பலனுக்காக இதுவரை 14 சதவிகிதம் தொகை பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், யூபிஎஸ் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத் தொகையில் 18 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.
இந்த நிலையில், “’ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ அரசு ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்கிறது” என்று தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.