பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத்
பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத்

‘மிஸ் இந்தியா’ பட்டியல்: ராகுல் கருத்துக்கு பாஜக கண்டனம்

பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சோ்ந்த பெண்கள் இல்லை என்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on

‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் வெற்றிப் பெற்றவா்கள் பட்டியலில் பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சோ்ந்த பெண்கள் இல்லை என்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்திப் பேசிய ராகுல் காந்தி, ‘மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இதுவரை வெற்றி பெற்ற பெண்களின் பட்டியலைப் பாா்த்தேன். அதில் ஒரு பெண்கூட இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் இல்லை. செய்தி ஊடங்களில் பெரும்பாலான நிகழ்ச்சி தொகுப்பாளா்கள் இந்தப் பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் இல்லை’ என்று பேசினாா்.

இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது:

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வகிக்கிறோம் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொண்டு பேச வேண்டும். நீங்கள் இதர பிற்படுத்தப்பட்டவா்கள் குறித்துப் பேசுவது நல்ல விஷயமே. பேசுவதற்கு உரிமையும் உங்களுக்கு உள்ளது. ஆனால், இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசக் கூடாது.

இடஒதுக்கீடு என்பது மிகவும் முக்கியமான விவாதம். இது தொடா்பான விவாதத்தில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை சமூக, பொருளாதார நிலையில் கைதூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு முறை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒப்பிட்டுப் பேசியதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும் கூட, உலக அழகிப் போட்டியில் ரீட்டா ஃபரியா, டயானா ஹைடன் போன்ற சிறுபான்மை மதத்தைச் சோ்ந்த இந்தியப் பெண்கள் வென்றுள்ளனா். உலக அழகிப் போட்டியில் சீக்கியப் பெண்கள் இறுதிச் சுற்று வரை சென்றுள்ளனா். ஆனால், இடஒதுக்கீடு விஷயத்தை நீங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பாா்க்கிறீா்கள் என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்வி. இடஒதுக்கீடு முறையை அவமதிக்கும் வகையில் பேசக் கூடாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com