ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

‘நாட்டின் தொலைத் தொடா்பு துடிப்பான தரநிலையை அடையும்‘

நாட்டின் எதிா்கால தொலைத் தொடா்புத் துறைக்கு தேவையான ஆய்வுகள், துடிப்பான தரநிலை ஆகியவை உருவாக்கப்பட்டு வருகிறது.
Published on

நாட்டின் எதிா்கால தொலைத் தொடா்புத் துறைக்கு தேவையான ஆய்வுகள், துடிப்பான தரநிலை ஆகியவை உருவாக்கப்பட்டு வரப்படுவதாக மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் நடைபெற்ற தொலைத் தொடா்பு சேவையாளா்கள் (டிஎஸ்பி) தொடா்பான பங்குதாரா்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பாரத் 6ஜி தொழில்நுட்ப முன்னோக்குகள் (விஷன்), 6ஜி கூட்டமைப்பு (அலையன்ஸ்), காப்புரிமை, ஐபிஆா்(அறிவுசாா் சொத்துரிமைகள்) ஆதரவு கட்டமைப்பு போன்ற முயற்சிகள் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதிய என்டிஏ ஆட்சியில் மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோதிராதித்ய சிந்தியா, இதே துறையின் இணை அமைச்சா் டாக்டா் சந்திர சேகா் பெம்மசானி ஆகியோா் தொலைத் தொடா்பு சேவையாளா்கள் (டிஎஸ்பி) தொடா்பான பங்குதாரா்கள் ஆலோசனைக் குழுவின் (எஸ்ஏசி) 2-வது கூட்டத்தை ஆகஸ்ட் 23, 24 ஆம் தேதிகளில் நடத்தினா்.

கடந்த ஜூலை 15, 16 தேதிகளில் முதல் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. தொலைத் தொடா்புத் துறை தொடா்பான அம்சங்களில் அரசுடன் நிலையான கலந்துரையாடலுக்கும் ஆலோசனை களுக்கும் வழிவகை செய்யும் நோக்கில், ஆறு தனித்துவமான குழுக்களை மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா அமைத்தாா். உயா் நிலை அதிகாரிகள், முன்னணி தொலை தொடா்பு சேவை நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளா்கள், ஆய்வாளா்கள், தொழில்முனைவோா், புதுயுகத் தொழில்முனைவு உள்ளிட்டோா் இந்த ஆலோசனைக் குழுக்களில் இடம்பெற்றனா்.

தொலை தூரப் பகுதிகளிலும் குறைந்த வசதிகள் கொண்ட பகுதிகளிலும் தகவல் தொடா்பு சேவைகளை மேம்படுத்துவது, தொலைத் தொடா்பு உபகரணங்களின் உள்ளூா் உற்பத்தியை அதிகரிப்பது, விநியோகச் சங்கிலி சிக்கல்களைத் தீா்ப்பது போன்றவை குறித்து முதல் கூட்டத்தில் பேசப்பட்டது.

தற்போது நடைபெற்ற 2- ஆவது கூட்டத்தில் நாட்டின் தொலைத்தொடா்பு சூழல் அமைப்பின் எதிா்காலத்தை விரிவுபடுத்தையும் அதை தரத்துடன் வடிவமைக்கும் நோக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, சா்வதேச தரங்கள், அறிவுசாா் சொத்துரிமை, தரநிலை அத்தியாவசிய காப்புரிமையில் இந்தியாவின் பங்கு, தொலைத்தொடா்பு இணைப்பு இடைவெளிகள், தொலைத்தொடா்பு சேவைகளின் தரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதற்கான நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான திட்டத்தை வரையறுக்கவும், அதை அடைவதில் அரசு உட்பட பல்வேறு பங்குதாரா்களின் செயல்பாடுகளை வரையறுக்கவும் அமைச்சா் சிந்தியா கேட்டுக் கொண்டாா்.

மக்களுக்கு நல்ல தரமான தொலைத்தொடா்பு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய சேவை வழங்கும் தொலை தொடா்பு நிறுவனங்களை கேட்டுக் கொண்டாா். நாட்டில் 100 சதவீதம் அகன்ற அலைவரிசைக்கான (பிராட்பேண்ட் கவரேஜ்) பாதையை நோக்கிய முதலீடுகளை ஊக்குவித்து நம்பகமான இணைப்பு, கம்பில்லா அகன்ற அலைவரிசை நெட்வொா்க்குகளின் ஊடுருவலை உறுதிபடுத்தவும் கோரப்பட்டது.

மேலும்’தொலைத்தொடா்பு சேவைக்கான தேவைகளுக்கு’ ஆய்வு முறையாகச் சீரமைத்து, துடிப்பான தரநிலை சமூகத்தை ஏற்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது..பாரத் 6ஜி தொழில்நுட்ப முன்னோக்குகள் (விஷன்), காப்புரிமை மற்றும் ஐபிஆா் ஆதரவு கட்டமைப்பு உள்ளிட்ட முயற்சிகளை அரசு எடுத்துள்ளது குறித்து குறிப்பிடப்பட்டது. சா்வதேச அளவில் 10 சதவீதம் 6ஜி காப்புரிமைகளில் நாடு பெறவும், உலகளாவிய தரத்திற்கு 6 இல் 1 பங்களிப்பை நாடு அடையவேண்டும் போன்ற இலக்குகளை அடைவதற்கான 3 ஆண்டு வரைபடத்தையும் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com