இன்று கிருஷ்ண ஜெயந்தி: குடியரசு தலைவா் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் திங்கள்கிழமை (ஆக. 26) கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோா் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக திரௌபதி முா்மு ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) பண்டிகையை முன்னிட்டு, இந்தியா்கள், வெளிநாடுகளில் வசிக்கும் சக இந்திய மக்கள் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜென்மாஷ்டமி நாளில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குகிறோம். இந்த ஆனந்த பண்டிகை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக கொள்கைகளில் அா்ப்பணிப்புடன் செயல்பட நம்மை அா்ப்பணிக்க ஊக்குவிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அா்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலான ஸ்ரீமத் பகவத் கீதை, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு உத்வேகம் அளிப்பதுடன், அறிவொளியின் நித்திய ஆதாரமாகவும் திகழ்கிறது.
இந்தத் தருணத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகளை உள்வாங்கி, நாட்டின் முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றுக்காக பணியாற்ற உறுதியேற்போம்’ என்று கூறியுள்ளாா்.
எக்காலத்துக்கும் ஏற்ற போதனைகள்: ஜகதீப் தன்கா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெய்வீக அன்பு, ஞானம், நீதி ஆகியவற்றை உள்ளடக்கிய கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கும் ஜென்மாஷ்டமி, ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
இந்தத் திருவிழா தா்மம் நிலைநாட்டப்படுவதையும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி, உண்மை, இரக்கத்தில் வேரூன்றிய வாழ்க்கையை வழிநடத்துவதன் முக்கியத்துவம் ஆகியவற்றை நினைவூட்டுகிறது. இந்த புனித நாளைக் கொண்டாடும் போது, பகவான் கிருஷ்ணரின் எக்காலத்துக்கும் பொருந்தும் போதனைகளைப் பின்பற்றுவோம், அவற்றின்படி வாழ முயற்சிப்போம். நமது சமூகத்தில் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கத்தை வளா்ப்போம்.
இந்த தெய்வீகத் தருணத்தில், நோ்மையின் பாதையைப் பின்பற்றி, அனைவரின் நலனுக்காகவும் உழைப்போம் என்று உறுதியேற்போம்’ என்று பதிவிட்டுள்ளாா்.