மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர பிரமாண்ட சிலை, சுக்கு நூறாக உடைந்து சேதமடைந்தது.
மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.
கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து, சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சிவாஜி சிலை உடைந்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி (பவார்) மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “முறையான பராமரிப்பு இல்லாததால், சிலை இடிந்து விழுந்துள்ளது. இதற்கு மாநில அரசுதான் முழுக் காரணம். சிலைக் கட்டுமானப் பணியில் அரசு முழுமையான கவனம் செலுத்தவில்லை. நிகழ்ச்சியை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. இந்தச் சிலையை திறக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கமிஷன் தொகையைப் பெற்றுக்கொண்டு அதற்கேற்ப ஒப்பந்தங்களை வழங்குவதில் மாநில அரசு குறியாக இருக்கிறது” என்றார்.
இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிர அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்த எந்த விவரங்களும் என்னிடம் இல்லை. இருப்பினும், சிந்துதுர்க் மாவட்டத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதே இடத்தில் புதிய சிலை அமைக்க நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை, கடல் கோட்டையை கட்டுவதில் மன்னர் சிவாஜியின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு மரியாதையாக நிறுவப்பட்டது. இந்த விஷயத்தை விரைவாகவும் திறம்படவும் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று கூறினார்.