கொல்கத்தா சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பின், பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், இந்தியா முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, மத்திய அரசு அனுப்பியிருக்கும் பதில் கடிதத்தில், வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மேற்கு வங்கத்துக்கு 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டும்கூட, இன்னும் சில நீதிமன்றங்கள் தொடங்கப்படவில்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கொல்கத்தாவில் இயங்கி வரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மம்தா பானர்ஜி கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், பாலியல் பலாத்காரம் செய்பவர்களைத் தண்டிக்க கடுமையான மத்திய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், அந்தக் கடிதத்தில், தற்போது கிடைக்கும் தரவுகளின்படி, நாட்டில் நாள்தோறும் 90 வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றும் மம்தா கூறியிருந்தார்.
இதற்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, பதில் கடிதம் எழுதியுள்ளார். கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
மேலும், விரைவு நீதிமன்றங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கும் மத்திய அமைச்சர், இதுபோன்ற நீதிமன்றங்களை அமைப்பதற்கான மத்திய நிதியுதவி திட்டம் அக்டோபர் 2019 இல் தொடங்கப்பட்டுள்ளது. 30.06.2024 நிலவரப்படி, 409 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 752 விரைவு நிதிமன்றங்கள் 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2,53,000 வழக்குகளுக்கு மேல் முடிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்திற்கு மொத்தம் 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளன, இதில் 20 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் மற்றும் 103 வன்கொடுமை மற்றும் போக்சோ சட்ட வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றங்களும் அடங்கும். ஆனால், இந்த நீதிமன்றங்கள் 2023 ஜூன் வரை மேற்கு வங்கத்தில் முழுமையாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் 08.06.2023 தேதியிட்ட கடிதத்தில் 7 விரைவு நீதிமன்றங்களைத் தொடங்க உறுதிமொழியுடன் திட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தது. திருத்தப்பட்ட இலக்கின் கீழ், மேற்கு வங்கத்துக்கு 17 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. தற்போதுவரை 6 நீதிமன்றங்கள்தான் திறக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 48,600 வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தும், மாநில அரசு மீதமுள்ள 11 விரைவு நீதிமன்றங்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார்.