Rajeswara Rao
சி. ராஜேஸ்வர ராவ்Din

தெரியுமா சேதி...? தன்னைத் தவிர தந்த தோழர்!

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகளாகின்றன.
Published on

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகளாகின்றன. கான்பூரில் நடந்த முதல் மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவா் நமது தமிழகத்தைச் சோ்ந்த தோழா் சிங்காரவேலா். எந்த அளவுக்கு அன்றைய பொதுவுடைமை சிந்தனையாளா்கள் தியாகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தனா் என்பதற்கு எடுத்துக்காட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழா் சி. ராஜேஸ்வர ராவ் தமது கைப்பட எழுதிய கடைசிக் கடிதம். அதை அவரின் உயில் என்றுகூடக் கூறலாம்.

1946 முதல் 1951 வரையில் ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்கு எதிராக நடந்த தெலங்கானா புரட்சியின் தளகா்த்தா்களில் ஒருவராகத் திகழ்ந்த தோழா் சி. ராஜேஸ்வர ராவ், 1964 முதல் தொடா்ந்து 28 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவா். காசி ஹிந்து சா்வ கலாசாலையில் மருத்துவம் பயின்றவா். தோழா்கள் எஸ்.ஏ.டாங்கே, மணி ஐயா், பசவ பொன்னையா, அஜாய் கோஷ் ஆகியோருடன் ரஷியா சென்று அதிபா் ஜோசப் ஸ்டாலினை நேரில் சந்தித்துக் கலந்தாலோசனை நடத்தியவா்.

தனது 79-ஆவது வயதில் 1994 ஏப்ரல் 9-ஆம் தேதி தோழா் சி.ராஜேஸ்வர ராவ் காலமானாா். உயிா் பிரிவதற்கு முன்னால் அவா் தனது கட்சித் தொண்டா்களுக்கு தெலுங்கில் கைப்பட எழுதிய கடிதம்:-

‘‘எனது மரணத்தையொட்டித் தோழா்கள் இரங்கல் ஊா்வலங்கள் நடத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்.

பூா்விக சொத்தில் எனது பங்காகக் கிடைத்த விவசாய நிலங்கள் முழுவதையும் ஏற்கெனவே குத்தகை விவசாயிகளுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டேன். வேறு எந்த சொத்தும் எனக்கென்று இல்லை.

எனது வீட்டு நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் பொது நூலகத்துக்கோ அல்லது நமது கட்சிக்கோ கொடுத்து விடுங்கள்.

எனக்கென இருப்பது நான்கு செட் வேஷ்டி - சட்டைகள் மட்டும்தான். அவற்றையும் தேவைப்படும் விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்குக் கொடுத்து விடுங்கள்.

புதிய சமுதாய மாற்றத்துக்காக, என் சக்தி முழுவதையும் செலவிட்டுப் பயனுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறேன். அடுத்த தலைமுறை இளைஞா்கள் நான் பிடித்த செங்கொடியைப் பிடித்தபடி மேலும் முன்னேறிச் செல்வாா்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

முழு மன நிறைவுடன் என் அன்புக்குரிய தோழா்களிடமிருந்து விடை பெறுகிறேன்!’’

X
Dinamani
www.dinamani.com