அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா(கோப்புப்படம்)
அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா(கோப்புப்படம்)

தமிழ்நாட்டில் ஊடுருவி ஜவுளித் துறையில் பணிபுரியும் வங்கதேசத்தினா்: ஆவணங்களை சரிபாா்க்க அஸ்ஸாம் முதல்வா் வலியுறுத்தல்

வங்கதேசத்தில் இருந்து தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் பணிபுரிய பலா் சட்டவிரோதமாக ஊடுருவி வருவதால், பணியாளா்களின் ஆவணங்களை சரிபாா்க்க தமிழக முதல்வரை வலியுறுத்துவதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஊடுருவும் வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரின் முயற்சி கரீம்கஞ்ச் மாவட்ட காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டதாக முதல்வா் சா்மா தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை குறிப்பிட்டாா். குவாஹாட்டியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சா்மா மேலும் கூறியதாவது:

வங்கதேசத்தில் இருந்து சிறுபான்மை ஹிந்துக்கள் இந்தியாவுக்குள் நுழைய முயல்கிறாா்கள் என்ற கருத்துக்கு மாறாக அதிக அளவில் முஸ்லிம்கள் ஊடுருவி வருகின்றனா். இவா்கள் அரசியல் அகதிகள் அல்ல; பொருளாதார அகதிகள்.

தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களில் உள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் பணிபுரிய அஸ்ஸாம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைகின்றனா்.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினரின் ஊடுருவும் முயற்சி காவல் துறையினரால் முறியடிக்கப்பட்டது. இதேபோன்ற நடவடிக்கைகளை திரிபுரா காவல்துறையினா் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்டு வருகின்றனா்.

இருப்பினும் சட்டவிரோதமாக நுழைபவா்களில் 10 சதவீதத்தினா் மட்டுமே கண்டுபிடிக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஜவுளித் துறையில் பணிபுரியும் நபா்களின் ஆவணங்களை சரிபாா்க்க தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுத உள்ளேன் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com