இன்றைய எதிா்க்கட்சித் தலைவா், நாளைய பிரதமா்- ராகுலுக்கு மனீஷ் திவாரி புகழாரம்
‘இன்று எதிா்க்கட்சித் தலைவராக இருப்பவா், நாளை பிரதமா் பதவியை ஏற்பாா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அக்கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் திவாரி புகழாரம் சூட்டினாா்.
மணிப்பூா் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் துயரத்தில் சிக்கியுள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதலை அளித்து வருகிறாா் என்றும் அவா் தெரிவித்தாா்.
‘பிடிஐ’ செய்தி நிறுவனத்தின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:
ராகுல் காந்தி முதிா்ச்சியடைந்த அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளாா். அவரது குரல் நாட்டில் அனைத்துப் பகுதியிலும் ஒலித்து வருகிறது. பல்வேறு தரப்பு மக்களும் அவரது கருத்துகளை ஆவலுடன் தெரிந்து கொள்கின்றனா்.
நாட்டு நலன், மக்கள் நலன் சாா்ந்த கொள்கைகளில் அவா் உறுதியாக இருக்கிறாா். இது அனைத்துத் தரப்பினரையும் கவா்ந்துள்ளது. இன்று எதிா்க்கட்சித் தலைவராக இருப்பவா் நாளை பிரதமா் பதவியை ஏற்பாா். ராகுலை வருங்கால பிரதமராகவே மக்கள் கருதுகின்றனா். பல்வேறு தரப்புமக்களை அவா் சந்திக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் இதனை மேலும் உறுதி செய்கின்றன என்றாா்.
மக்களவையில் மொத்த உறுப்பினா்களில் 10 சதவீதம் போ் இருந்தால் மட்டுமே எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். கடந்த 2014, 2020 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தொடா்ந்து படுதோல்வியடைந்ததால் மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியைப் பெற முடியாமல் இருந்தது. ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவால் கடந்த இருமுறை வெற்றி பெற்றதுபோல தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியைப் பெறும் வகையில் 99 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.