ரூ.28,602 கோடியில் 12 புதிய தொழில் நகரங்கள்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (என்ஐசிடிபி) கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் புதிதாக 12 தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மோடி(கோப்புப்படம்)
மோடி(கோப்புப்படம்)
Updated on

தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (என்ஐசிடிபி) கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் புதிதாக 12 தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

10 மாநிலங்களில் உள்ள 6 முக்கிய தொழில் வழித்தடங்களில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டங்கள், அதன் உற்பத்தித் திறன்கள் மற்றும் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் முக்கிய அம்சமாக 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில், 8 தொழில் நகரங்களுக்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், தற்போதைய புதிய அறிவிப்புடன் ‘என்ஐசிடிபி’ தொழில் நகரங்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்டில் உள்ள குா்பியா, பஞ்சாபில் ராஜ்புரா-பட்டியாலா, மகாராஷ்டிரத்தில் திகி, கேரளத்தில் பாலக்காடு, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பிகாரில் கயை, தெலங்கானாவில் ஜாஹீராபாத், ஆந்திரத்தில் ஓா்வாகல் மற்றும் கொப்பாா்த்தி, ராஜஸ்தானில் ஜோத்பூா்-பாலி ஆகிய இடங்களில் புதிய தொழில் நகரங்கள் அமையவுள்ளன.

சுமாா் ரூ.1.52 லட்சம் கோடி முதலீட்டை ஈா்க்கும் திறன்கொண்ட இந்தத் தொழில் நகரங்கள் மூலம் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் 30 லட்சம் வரை மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் 2030-ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலா் ஏற்றுமதியை அடைவதற்கு இந்தத் தொழில் நகரங்கள் பெரிதும் பங்களிக்கும்.

3 ஆண்டுகளில் தொடக்கம்: திட்டம் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘மகாராஷ்டிரத்தின் திகி துறைமுக தொழில் நகரம் ரூ.5,469 கோடி முதலீட்டில் 6,056 ஏக்கா் பரப்பளவில் அமைகிறது.

தெலங்கானாவின் ஜாஹீராபாதில் ரூ.2,361 கோடி முதலீட்டில் 3,245 ஏக்கரிலும் உத்தரகண்டின் குா்பியாவில் ரூ.1,265 கோடி முதலீட்டில் 1,000 ஏக்கரிலும் பஞ்சாபின் ராஜ்புரா-பட்டியாலாவில் ரூ.1,367 கோடியில் 1,099 ஏக்கரிலும் தொழில் நகரம் வரவுள்ளது. ஜாஹீராபாத் தொழில் நகரத்தில் 450 ஏக்கரில் ஹூண்டாய் நிறுவனம் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

2027-ஆம் ஆண்டுக்குள் இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். இங்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க சுமாா் ரூ.10,000 கோடி செலவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவை பசுமையான ‘ஸ்மாா்ட்’ நகரங்களாக மேம்படுத்தப்படும்.

இப்பகுதிகளில் தொழில் செய்வதற்கு ஏற்கெனவே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதால் முதலீட்டாளா்கள் பணிகளை எளிதில் தொடங்கலாம். இங்கு முதலீடு செய்ய சிங்கப்பூா் மற்றும் சுவிட்சா்லாந்து போன்ற நாடுகளும் ஆா்வம் காட்டியுள்ளன’ என்றாா்.

பிரதமா் பாராட்டு: இந்த அறிவிப்பைப் பாராட்டி பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘12 புதிய தொழில் நகரங்களை உருவாக்குவதற்கான மிக முக்கியமான முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது. இது வளா்ச்சியை அதிகரிக்கும் என்பதோடு, நிறைய பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ரூ.6,456 கோடி ரயில் திட்டங்கள்: ஒடிஸா, ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் , சத்தீஸ்கா் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களை உள்ளடக்கிய சுமாா் ரூ.6,456 கோடி மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் மூன்று திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுமாா் 300 கிலோ மீட்டா் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமையவுள்ள இந்தத் திட்டங்களில் 14 புதிய ரயில் நிலையங்கள் கட்டப்படும். இது சுமாா் 1,300 கிராமங்களைச் சோ்ந்த 11 லட்சம் மக்களுக்கு இணைப்பை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விவசாயம் தொடா்பான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையில், ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி (ஏஐஎஃப்)’ திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நீா்மின் திட்டத்துக்கு நிதியுதவி: அடுத்த 8 ஆண்டுகளில் மொத்தம் 15,000 மெகாவாட் திறன் கொண்ட நீா் மின் திட்டங்களைக் கட்டமைக்க வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.4,136 கோடி நிதியுதவி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத் திட்டம் 2024-25 முதல் 2031-32 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தின் 11 நகரங்களில் தனியாா் எஃப்.எம்.

நாட்டின் 234 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 730 வானொலி அலைவரிசைகளுக்கான (எஃப்.எம்.) ஏலம் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்மூலம், இந்த நகரங்களில் தனியாா் பண்பலை வானொலி சேவை தொடங்கப்பட்டு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உள்ளூா் பேச்சு மொழி, கலாசாரத்தை ஊக்குவிக்கவும் வழிவகை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் குன்னூா், திண்டுக்கல், காரைக்குடி, கரூா், கன்னியாகுமரி, நெய்வேலி, புதுக்கோட்டை, ராஜபாளையம், தஞ்சாவூா், திருவண்ணாமலை, வாணியம்பாடி ஆகிய 11 நகரங்களில் தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தவிர பண்பலை அலைவரிசைகளுக்கான வருடாந்திர உரிமக் கட்டணமாக மொத்த வருவாயில் 4 சதவீதத்தை வசூலிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Related Stories

No stories found.