மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி.க்களின் கார்கள் மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் பாஜகவின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு இடையே, பாஜக தலைவர்கள் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது.
west bengal
பாஜக எம்பி ஜெயந்த குமார் ராயின் கார் முற்றுகை. dotcom
Published on
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் பாஜகவின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு இடையே, பாஜக தலைவர்கள் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

குறிப்பாக கொல்கத்தாவில் இரு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாபெரும் பேரணியை மாணவர்கள் சங்கம் முன்னெடுத்த நிலையில், நபன்னா பகுதியில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் தங்கள் பேரணியைத் தொடர முயன்றனர். காவல்துறையினர் மீது கல் வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைத்தனர். மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பாஜக இன்று 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் அறிவித்தது.

அதன்படி பாஜக இன்று பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது. காவல்துறையினரின் தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

பாஜக தலைவர் ப்ரியங்கு பாண்டேவின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பத்பரா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது சுமார் 50 பேர் வரையில் காரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளார்.

மேலும் இப்பகுதியில் நடந்த வன்முறையில் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இது மேற்குவங்க திரிணமூல் அரசின் திட்டமிட்ட செயல் என்று பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.

திரிணமூல் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான், ப்ரியங்கு பாண்டேவின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

தொடர்ந்து, சிலிகுரியில் பாஜக எம்பி ஜெயந்த குமார் ராயின் வாகனத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். அவரது கார் மீதும் கல் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாஜகவின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தவே பாஜக போராட்டம் என்ற பெயரில் இவ்வாறு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்படும் என்றும், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு வருகிற ஆக.31, செப். 1 இரு நாள்கள் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் கட்சி, எதிர்க்கட்சியான பாஜக, மாணவர் அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com