பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உறங்கிக்கொண்டிருந்த தோழி, காலையில் எழுந்து பார்க்கும்போது கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பெண்.
நெருங்கிய தோழி கொலை செய்யப்பட்டிருக்கிறார், அதுவரை நாம் அந்த உடலுடன் உறங்கிக்கொண்டிருந்திருக்கிறோம் என்ற உணர்வு எந்த அளவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாராலும் கற்பனையும் செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
தனது திருமண வாழ்வு சரியாக இல்லை என்று கூறி கவலைப்பட்டுக்கொண்டிருந்த தோழி நவ்யாஸ்ரீயை (28) சமாதானம் செய்து இரவு உறங்கச் சென்றவர், காலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் ஐஸ்வர்யா.
இந்த வழக்கில், நவ்யாஸ்ரீயின் கணவர் கிரணை (31) காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இவர் டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். இவர் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
நவ்யாஸ்ரீயும், ஐஸ்வர்யாவும் குழந்தைப் பருவ நண்பர்கள். நவ்யாஸ்ரீ - கிரண் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். நடனப் பயிற்சியாளராக இருந்த நவ்யாஸ்ரீ, தனது வேலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என கிரண் நினைத்திருக்கிறார். ஆனால், அதனை நவ்யாஸ்ரீ ஒப்புக்கொள்ளவில்லை. கிரணுக்கு சந்தேகமும் இருந்துள்ளது. இது நவ்யா ஸ்ரீக்கு பிடிக்காமல் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நவ்யா ஸ்ரீ தனது தோழி ஐஸ்வர்யாவை வீட்டுக்கு வரவழைத்து, பிரச்னையை சொல்லி அழுதிருக்கிறார். கிரண் வீட்டுக்கு வந்ததும், தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது. அதனை ஐஸ்வர்யா தடுத்துள்ளார். ஐஸ்வர்யாவும், நவ்யாவும் ஒரே அறையில் உறங்கிய நிலையில்தான், காலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை ஐஸ்வர்யா அறிந்துகொண்டார். அப்போது, கிரண் வீட்டில் இல்லாததும் தெரிய வந்தது. உடனடியாக காவல்நிலையத்துக்கு அவர் தொடர்புகொண்டு தகவல் அளித்ததைத் தொடர்ந்து கிரண் கைது செய்யப்பட்டுள்ளார்.