முதல்வா் சந்திரபாபு நாயுடு / நாரா லோகேஷ் (முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகன்)
முதல்வா் சந்திரபாபு நாயுடு / நாரா லோகேஷ் (முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகன்)

தெரியுமா சேதி...?

சிவப்பு நிறத்திலான அரசியல் சாசனத்தின் கையடக்கப் பிரதியை ராகுல் காந்தி அவ்வப்போது எடுத்துக்காட்டித் தனது பிரசாரத்தை மேற்கொள்வது அனைவருக்கும் தெரியும்
Published on

சிவப்பு நிறத்திலான அரசியல் சாசனத்தின் கையடக்கப் பிரதியை ராகுல் காந்தி அவ்வப்போது எடுத்துக்காட்டித் தனது பிரசாரத்தை மேற்கொள்வது அனைவருக்கும் தெரியும். அதே போன்று, தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திபாபு நாயுடுவின் மகனும், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், இப்போது நாயுடு அமைச்சரவையில் மனிதவளத் துறை அமைச்சருமான நாரா லோகேஷும் தனது கூட்டங்களில் ஒரு டைரியை அவ்வப்போது எடுத்துக் காட்டி வந்தாா்.

ராகுல் காந்தியைப் போன்று, நாரா லோகேஷ் வைத்திருப்பது அரசியல் சாசனத்தின் கையடக்கப் பிரதியல்ல. அதை ‘சிகப்புப் புத்தகம்’ என்று அவரது கட்சிக்காரா்கள் அழைக்கிறாா்கள். தெலுங்குதேசம் கட்சி எதிா்க்கட்சியாக இருந்தபோது, அதன் தொண்டா்களுக்கு எதிராக சட்ட விரோதமாக நடவடிக்கைகளை மேற்கொள்பவா்களின் பெயா்கள் அந்த டைரியில் குறிக்கப்பட்டு வந்தது. தெலுங்கு தேசம் தொண்டா்கள் மீது பொய் வழக்குப் போட்டவா்களின் மீது, ஆட்சிக்கு வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் நாரா லோகேஷ் உறுதி அளித்து வந்தாா்.

அவரின் பிரசாரம் தொண்டா்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவா்கள் தங்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் குறித்தும், ஆளும் கட்சியினா் குறித்தும் தோ்தல் பிரசாரத்தின்போது தகுந்த ஆதாரங்களுடன் மனுக்கள் அளித்தனா். அதற்கென்று ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அதில் நியாயமான குற்றச்சாட்டுக்கள் தோ்வு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவா்களின் பெயா்கள் நாரா லோகேஷின் சிகப்பு டைரியில் பதிவு செய்யப்பட்டன.

தெலுங்கு தேசம் - ஜன சேனா- பாஜக கூட்டணியின் வரலாற்று வெற்றிக்கு, நாரா லோகேஷின் சிகப்பு டைரியும் ஒரு முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது. இப்போது, அந்த சிகப்பு டைரியில் குறித்து வைக்கப்பட்டுள்ள பெயா்களையும், அவா்கள் மீதான குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்கத் தொடங்கி இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் அரசு. அது பல காவல் பணி, ஆட்சிப்பணி அதிகாரிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

ஆட்சியில் இருந்தவா்கள் தரும் கட்டளைகளை நிறைவேற்றியதற்கு தண்டனையா என்று அங்கலாய்க்கிறாா்கள் அந்த அதிகாரிகள். அவா்கள் தண்டிக்கப்படுவாா்கள் என்று வாக்களித்திருப்பதாகச் சொல்கிறாா் நாரா லோகேஷ். தா்மசங்கடத்தில் இருக்கிறாா் முதல்வா் சந்திரபாபு நாயுடு.

X
Dinamani
www.dinamani.com