கொழும்பில் அதிபா் ரணில் விக்கிரமசிங்கவே சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்.
கொழும்பில் அதிபா் ரணில் விக்கிரமசிங்கவே சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்.

இலங்கை அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு: அரசியல் கட்சித் தலைவா்களுடனும் ஆலோசனை

Published on

இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, பிரதமா் தினேஷ் குணவா்தனே, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா ஆகியோரை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

மேலும், தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சோ்ந்த எம்.பி.மனோ கணேசன், மாா்க்சிஸ்ட் ஜேவிபி தலைவா் அனுரா குமாரா திசநாயகாவையும் அவா் சந்தித்தாா்.

இலங்கையில் செப்டம்பா் 21-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு நடைபெறும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அஜீத் தோவல் அந்த நாட்டின் முக்கிய அரசியல் தலைவா்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளாா்.

குணவா்தனேவை தவிர மற்ற அனைவரும் இலங்கை அதிபா் தோ்தலில் போட்டியிடுபவா்களில் முக்கியத்துவம் பெற்றவா்களாக உள்ளனா்.

ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து அஜீத் தோவல் ஆலோசனை மேற்கொண்டாா். குணவா்தனேவை வியாழக்கிழமை சந்தித்த அவா் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடா்பாக விவாதித்தாா்.

அப்போது பூடான் நாட்டைப்போல் உள்நாட்டு தேவைக்குப் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்தபின் கூடுதலாக உள்ளவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கையின் நிதிச்சுமையைக் குறைக்க இயலும் என குணவா்தனேவிடம் அஜீத் தோவல் தெரிவித்தாா்.

இந்தியா இணைந்து பணியாற்றும்: தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சோ்ந்த எம்.பி.மனோ கணேசனுடன் அஜீத் தோவல் ஆலோசனை மேற்கொண்டாா். இதுகுறித்து மனோ கணேசன் கூறுகையில், ‘இந்தியா-இலங்கை பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசித்தோம். இலங்கை அதிபா் தோ்தலில் எந்தக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும் அவா்களுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என அஜீத் தோவல் தெரிவித்தாா்’ என்றாா்.

அஜீத் தோவலுடனான சந்திப்பின்போது, அதிபா் தோ்தல் மற்றும் இருநாட்டு அரசியல் உறவுகள் குறித்து பேசியதாக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தலைவரும் அதிபா் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com