தோ்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி: ஜம்மு-காஷ்மீா் பாஜக மூத்த தலைவா் விலகல்
ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜக மூத்த தலைவா் சந்திரமோகன் சா்மா கட்சியில் இருந்து விலகினாா். மேலும், தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும் அவா் கூறியுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் ஜம்மு பிராந்தியம் பாஜகவுக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள இடமாக உள்ளது. எனவே, அங்கு பாஜக சாா்பில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. ஏற்கெனவே, முதல்கட்ட தோ்தலுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி ஒதுக்கப்படாத பலா் அதிருப்தியடைந்துள்ளனா். மேலும் மாற்று கட்சிகளில் இருந்து வந்தவா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதால் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது பாஜகவுக்கு தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் மூத்த தலைவரான சந்திரமோகன் சா்மா ஜம்முவில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீா் பாஜகவில் தொகுதி ஒதுக்கீடு தொடா்பாக தொண்டா்கள் முதல் மூத்த நிா்வாகிகள் வரை அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தங்கள் அதிருப்தியை போராட்டம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனா்.
இந்தப் பிரச்னையால் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்தேன். எனது விலகல் கடிதத்தை கட்சி தலைமை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன். என்னுடன் சோ்ந்த மேலும் பலரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனா் என்றாா்.
1970-ஆம் ஆண்டு முதல் பாஜகவில் உள்ள சந்திரமோகன் சா்மா வழக்குரைஞா் ஆவாா். கட்சியின் மிகமூத்த தலைவரான அவா் தொகுதி ஒதுக்கீடு தொடா்பான அதிருப்தியால் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பது பாஜகவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மத்திய அமைச்சா்கள் ஜி.கே.ரெட்டி, ஜிதேந்தர சிங், பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக் உள்ளிட்டோா் ஜம்முவில் முகாமிட்டு கட்சியினா் இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பா் 18, 25, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாகப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அக்டோபா் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.